சிறைச்சாலை தொடர்பில் அவதூறு பரப்பியதாக யாழில் யுவதியொருவருக்கு எதிராக முறைப்பாடு

சிறைச்சாலை திணைக்களம் தொடர்பில் தவறான கருத்துக்களை ஊடகங்களுக்கு பரப்பியதாக தெரிவித்து யுவதி ஒருவருக்கு எதிராக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில், சிறைச்சாலை அதிகாரிகளினால் நேற்றைய தினம் முறைப்பாடளிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முன்னதாக, புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, குறித்த பொதுமகன் கடந்த 04 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

எனினும், கைது செய்யப்பட்டவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட போது நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர் சிறைச்சாலை மருத்துவமனையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அந்த மாற்றப்பட்டுள்ளார்.

எனினும், தமது சகோதரனுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, சந்தேகநபரின் சகோதரி ஊடகசந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

எனினும், குறித்த யுவதி நடாத்திய ஊடகச்சந்திப்பில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை தொடர்பில் அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்திருந்ததாக குற்றம் சுமத்தியே, சிறைச்சாலை அதிகாரிகளால், காவல்துறையில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.