நத்தார் தாத்தாவை போன்று ஜனாதிபதி நிவாரண வாக்குறுதிகளை அள்ளி வழங்குகிறார். எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் பொருளாதார நெருக்கடி தீவிரமடையும், அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கடுவலை பகுதியில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செவ்வாய்க்கிழமை (16) நிவாரணமளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொருளாதார பாதிப்புக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்ற வேளையில் இயற்கை அனர்த்தங்களுக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தித்வா சூறாவளி தொடர்பில் முன்னறிவிப்புக்கள் ஏதும் விடுக்கவில்லை என்று அரசாங்கம் குறிப்பிட்டுக் கொண்டு தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி நத்தார் தாத்தாவை போன்று நிவாரண வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார். ஆனால் பெருமளவிலானோருக்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபா கூட கிடைக்கப்பெறவில்லை.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் பொருளாதார பாதிப்பு மேலும் தீவிரமடையும்.அரசாங்கத்துக்கு எதிராக நாட்டு மக்கள் வீதிக்கு இறங்குவார்கள்.ஆகவே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய அரசாங்கம் நிவாரணங்களை வழங்க வேண்டும்.
அனர்த்தத்தின் போது முப்படையினர் தான் நாட்டு மக்களை பாதுகாத்தார்கள். இராணுவத்தினருக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அரசாங்கம் செயற்பட வேண்டும்.
புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் நன்கொடைகளுக்கு அடிபணிந்து இராணுவத்தினரை அரசாங்கம் காட்டிக்கொடுக்க கூடாது. இராணுவத்தினர் தான் நாட்டின் காவல் தெய்வங்களாக உள்ளனர் என்றார்.





