2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 06 ஆம் திகதி அமெரிக்க பாராளுமன்றத்தின் மீதான தாக்குதலுக்கு முன்பாக வொஷிங்டனில் ஆதரவாளர்களிடம் ஆற்றிய உரையை தவறாகத் தொகுத்து ஒளிபரப்பியதாகக் கூறி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரிட்டனிலுள்ள பிபிசி நிறுவனத்திற்கு எதிராக 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிபிசியின் பனோரமா (Panorama) நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட அந்த உரைத் தொகுப்பு, “திட்டமிட்டு, தீய நோக்குடன் மற்றும் ஏமாற்றும் வகையில்” திருத்தப்பட்டதாக ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கு திங்கட்கிழமை இரவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கில், அவதூறு செய்ததாகவும், புளோரிடா மாநிலத்தின் ஏமாற்றும் மற்றும் அநியாய வர்த்தக நடைமுறைகள் சட்டத்தை (Deceptive and Unfair Trade Practices Act) மீறியதாகவும் தலா 05 பில்லியன் டொலர் இழப்பீடு கோரப்பட்டுள்ளது.
பனோரமா (நிகழ்ச்சியில், ட்ரம்ப் உரையின் ஒரு மணி நேர இடைவெளியில் கூறப்பட்ட பகுதிகளை இணைத்து,“நாம் கெப்பிட்டல் நோக்கி நடந்து செல்வோம். நானும் உங்களுடன் இருப்பேன். நாம் போராடுவோம். கடுமையாகப் போராடுவோம்”என அவர் கூறியதாகத் தோற்றம் ஏற்படுத்தப்பட்டதாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் பிபிசி உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. எனினும், அந்த உரைத் தொகுப்பை ஒளிபரப்பியது “தீர்மானத்தில் ஏற்பட்ட தவறு” என ஒப்புக்கொண்டு ட்ரம்பிடம் மன்னிப்பு கேட்டிருந்தது. ஆனால், இது அவதூறு வழக்காகத் தொடரும் சட்ட அடிப்படை இல்லை என பிபிசி வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கின் மூலம் ஊடகங்களுக்கு எதிரான ட்ரம்பின் சட்டப் போராட்டம் சர்வதேச அளவுக்கு விரிந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.





