முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் டிஜிட்டல் புரட்சி

அரசாங்கத்தின் “டிஜிட்டல் இலங்கை” தேசிய கொள்கைக்கு அமைவாக, முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஒட்டுமொத்த தரவு கட்டமைப்பையும் நவீனமயமாக்கும் பாரிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மதரஸா கல்வி நிறுவனங்கள் தொடர்பான தரவுகளை ஒருமித்த “டிஜிட்டல் காப்பகத்தின்” கீழ் கொண்டு வருவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால நகர்வுகள் குறித்த மீளாய்வுக் கூட்டம், மத மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் முனீர் முலாளப்பர் தலைமையில் திங்கட்கிழமை (15) அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் குறிப்பிடுகையில்,

பாரம்பரிய கோப்பு முறைகளிலிருந்து விடுபட்டு, தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பொதுச் சேவையின் வினைத்திறனை அதிகரிப்பதே எமது இலக்காகும்.

குறிப்பாக, வக்பு சபையின் கீழ் உள்ள பள்ளிவாசல்களின் பூர்வீக ஆவணங்கள், காணிப் பத்திரங்கள் மற்றும் சட்ட ரீதியான பதிவுகளை எதிர்கால சந்ததியினருக்காக டிஜிட்டல் முறையில் பாதுகாப்பது காலத்தின் தேவையாகும்.

இந்த புதிய அமைப்பின் ஊடாக, பொதுமக்கள் தங்களின் தேவைகளுக்காக திணைக்களத்திற்கு நேரில் வருவதைத் தவிர்த்து, இருப்பிடத்திலிருந்தே இணையம் வாயிலாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் தகவல்களைப் பெறவும் வழிவகை செய்யப்படும்.

இத்திட்டத்தின் மூலம் திணைக்களத்தின் சேவைகள் டிஜிட்டல் மயப்படுத்தப்படுவதால், அரச நிர்வாகத்தில் அதிகபட்ச வெளிப்படைத்தன்மையும் வேகமும் உறுதி செய்யப்படும் என்றார்.

இந்தக் கலந்துரையாடலில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், வக்பு சபையின் தலைவர் முஹிதீன் ஹுசைன் மற்றும் வக்பு சபை உறுப்பினர்கள் மற்றும் மென்பொருள் பொறியாளர்கள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.