பொருளாதார மறுசீரமைப்புக்களின் அடிப்படை பொறிமுறைகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படக் கூடாது!

2026 முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் மந்த நிலைமை ஏற்படக் கூடும். தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்புக்கள் அவ்வாறே தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பொருளாதார மறுசீரமைப்புக்களின் அடிப்படை பொறிமுறைகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படக் கூடாது என பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2025ஆம் ஆண்டு ரூபாவின் பெறுமதி 5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில் அண்மைய தரவுகளுக்கமைய வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் செலவிடும் தொகையிலும் வீழ்ச்சி போக்கு அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் வருமானம் குறைவாகவே காணப்படுகிறது. தித்வா புயலின் தாக்கத்தினால் இந்த நிலைமை மேலும் வீழ்ச்சியடையக் கூடும்.

இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி வேகமும் மந்தமடையும் வாய்ப்புள்ளது. தித்வா புயலானது பொருளாதாரத்தில் பல்வேறு வழிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக விவசாயம், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் என பாரியளவு அழிவு ஏற்பட்டுள்ளது. உலக வங்கி அழிவுகள் குறித்த மதிப்பீடுகளை ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் அந்த அறிக்கை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 4 பில்லியன் டொலர் அளவிலான அழிவு ஏற்பட்டிருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சுனாமி பேரிடரின் போதான அழிவுக்கு ஒத்ததாகும். அன்றைய பொருளாதார நிலைமைகளுக்கமைய சுமார் 2 பில்லியன் டொலர் அளவிலான அழிவுகள் ஏற்பட்டன. உலக வங்கி அறிக்கை கிடைக்கப் பெறும் வரை இது குறித்து உறுதியாகக் கூற முடியாது. இவ்வாண்டு எதிர்பார்த்த வருமானம் ஓரளவு கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே பொருளாதாரத்தில் பாரிய தழம்பல் நிலைமை ஏற்படும் எனக் கூற முடியாது.

ஆனால் 2026 முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் மந்த நிலைமை ஏற்படக் கூடும். தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்புக்கள் அவ்வாறே தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பொருளாதார மறுசீரமைப்புக்களில் எரிபொருள் விலை திருத்தம் உள்ளிட்ட அடிப்படை பொறிமுறையிலிருந்து விலகக் கூடாது. மத்திய வங்கியால் தொடர்ச்சியாக பொருளாதார ஸ்திரத்தன்மை பேணப்படும் பட்சத்தில், நாட்டை மீளக் கட்டியெழுப்புவது இலகுவானதாக அமையும் என்றார்.