வடகீழ் பருவமழை தீவிரம் : எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டில் தற்போது நிலவி வரும் வடகீழ் பருவமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை மேலும் தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தொடர்ச்சியான மழை எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது 100 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்சாதனப் பயன்பாடு மற்றும் மரங்களுக்கு அருகில் நிற்பது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் வானிலை அவதானிப்புகளைப் பின்பற்றிச் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.