“இந்தியாவின் ‘மான் பார்மசூட்டிகல்’ நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட 10 மருந்துகள் தரமற்றவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், அரசாங்கம் தொடர்ந்தும் அதே நிறுவனத்திடமிருந்து மருந்துகளைக் கொள்வனவு செய்வதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது.
குறித்த நிறுவனத்திடம் மிருந்து மருந்துகளை அரசாங்கம் கொள்வனவு செய்வதற்குப் பின்னால் உள்ள ‘மருந்து மாபியா’ குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அச்சங்க ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமில் சஞ்ஜீவ வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (19) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்:
“பொதுமக்களுக்குத் தரமான மருந்துகளை விநியோகிப்பது அரசாங்கத்தின் மிக முக்கிய பொறுப்பாகும். அதற்கமைய, தமது பணியை உரியவாறு நிறைவேற்றாமல் அலட்சியப்படுத்தி, சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள் மீது சாடுவதை எப்போதும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுமக்களின் உயிரோடு விளையாட வேண்டாம். இந்நாட்டில் நீண்டகாலமாக நிலவிவரும் மருந்து மாபியா மற்றும் தரமற்ற மருந்து இறக்குமதி போன்றன தொடர்பில் கவனத்தில் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும். புதிய அரசாங்கத்தின் கீழும், தற்சமயம் மருந்து கொள்வனவு செயற்பாட்டில் முறைக்கேடாகச் செயற்பட்ட நபர்கள் குறித்த நிறுவனங்களில் அதிகாரிகளாகப் பணியாற்றி வருகின்றனர்.
நாட்டில் வருடாந்தம் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் 100 மருந்து வகைகள் தரமற்றவையாக உள்ளன. சர்ச்சைக்குரிய ஓண்டன்செட்ரோன் என்னும் ஊசி மருந்து செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 2 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர். இம்மருந்து இந்தியாவில் உள்ள மான் பார்மசூட்டிகல் என்னும் தனியார் நிறுவனம் ஒன்றிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 90 மருந்து வகைகள் தரமற்றவை எனப் பரிசோதனைகளில் நிரூபணமாகியுள்ளதாக அரச மருத்துவ விநியோகப் பிரிவு கணினி தரவு தகவல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நோயாளி ஒருவரின் உடலில் செலுத்தப்படும் ஊசி மருந்தால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருப்பது பாரதூரமான விடயமாகும். இந்த மருந்து நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கும் வரை அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? கட்டமைக்கப்பட்டுள்ள பரிசோதனையின் பின்னரே மருந்துகள் நோயாளர்களுக்கு வழங்கப்படும். மேற்படி மருந்து உற்பத்தி செய்யும் மான் பார்மசூட்டிகல் தனியார் நிறுவனத்திடமிருந்து ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட 9 மருந்துகள் தரமற்றவை எனப் பாவனையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. ஓண்டன்செட்ரோன் மருந்துடன் அந்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
மருந்து தயாரிப்பின் போதே கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையும் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாகத் தரமற்ற மருந்துகளை விநியோகிக்கும் நிறுவனத்திடமிருந்து மருந்துகளைக் கொள்வனவு செய்கின்றனர். எதற்காக இவ்வாறு செயற்படுகின்றனர்? குறித்த நிறுவனத்திடம் இருந்து மருந்துகளை அரசாங்கம் கொள்வனவு செய்வதற்குப் பின்னால் உள்ள ‘மருந்து மாபியா’ குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களுக்கும் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. கடமை அலட்சியத்தை அதிகாரிகள் மீது சுமத்தி தப்பிச்செல்ல முயலும் நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”





