ஊரக வளர்ச்சியின் அவசியத்தையும், ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களின் நலனையும் கருத்தில் கொண்டு அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில், “தமிழ்நாட்டின் உயிர் நாடியாக விளங்குவது ஊரகப் பகுதிகள் என்று சொன்னால் அது மிகையாகாது. பல்லாயிரக்கணக்கான கிராமங்களை கொண்டுள்ள தமிழ்நாடு, முன்னேற வேண்டுமானால் அங்கே மருத்துவ வசதி, குடிநீர் வசதி, கல்வி வசதி, வேளாண் வசதி போன்றவை ஏற்படுத்தித் தரப்பட வேண்டும்.
அப்படி செய்தால்தான் கிராமப்புறங்களில் தொழில்கள் அதிகமாக வளர்ந்து, பிழைப்புக்காக மக்கள் நகரங்களை நோக்கிச் செல்லும் நிலை குறையும். ஆனால், இதற்கு முற்றிலும் முரணான நிலை தமிழ்நாட்டில் நிலவு நிலவுகிறது. ஊரகப் பகுதிகளின் வளர்ச்சிக்காக பாடுபடும் ஊழியர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி ஊரக வளர்ச்சித் துறை என்பது ஊரக வீழ்ச்சித் துறையாக மாறிக் கொண்டிருக்கிறது.
கிராமப்புற ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர், தூய்மைக் காவலர், சுகாதார உதவியாளர் உள்ளிட்ட அடிப்படை பணிகளை மேற்கொள்பவர்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படுவதாகவும், அவர்களுடைய ஊதியத்தை குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தித் தர வேண்டுமென்ற கோரிக்கை கடந்த நான்கு ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தாலும் இதை திமுக அரசு கண்டு கொள்ளவில்லை என்றும், ஊரகச் செயலாளர் பதவியில் இருப்பவர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்றவை நிர்ணயிக்கப்படாததன் காரணமாக புதிதாக பணியில் சேர்ந்தவர்களும், பல ஆண்டுகளாக பணிபுரிபவர்களும் ஒரே ஊதியத்தை பெறும் அவல நிலை நீடிப்பதாகவும், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததன் காரணமாக ஊரக வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, தங்களது 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று பேரணி நடத்தப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களின் கோரிக்கைகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அதிகாரிகளிடம் அடுத்தகட்ட போராட்டம் துவங்கும் என்று கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாக திமுக அரசு தொடர்ந்து தெரிவித்து வந்தாலும், அரசு ஊழியர்கள், போக்குவரத்துக் கழக ஊழியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், மின்சார வாரிய ஊழியர்கள், பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பணியாளர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள், பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் அன்றாடம் போராட்டம் நடத்துவதைப் பார்க்கும்போது பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பது தெளிவாகிறது.
மொத்தத்தில், கடந்த 55 மாத கால ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களும் ஆற்றொணாத் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதுதான் கள யதார்த்தம் திமுக அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
ஊரக வளர்ச்சியின் அவசியத்தையும், ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்துப் பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் சார்பில் முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





