பாராளுமன்றத்துக்கு வர வேண்டும் என்பதை விட, சகல எதிர்க்கட்சிகளும் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அக்கறை கொண்டுள்ளார். சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தின் கீழ் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைகளுடன் இணைந்து பயணிக்க முடியும் என்பதே எனது நிலைப்பாடாகும் என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (31) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த அரசாங்கம் ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. காலம் மிக வேகமாகச் சென்று விடும். பல அரசாங்கங்களில் அங்கத்துவம் வகித்த அனுபவத்தின் அடிப்படையில் இதைக் கூறுகின்றேன். எனவே எதிர்க்கட்சிகளை விமர்சித்துக் கொண்டிருப்பதை விட, அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டியதே காலத்தின் தேவையாகும்.
அரசாங்கத்திலிருக்கும் போது எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதும், எதிர்க்கட்சியிலிருக்கும் போது அரசாங்கத்தை விமர்சிப்பதும் குறுகிய அரசியலாகும். ஆனால் தற்போது இடம்பெற வேண்டியது அந்த அரசியல் அல்ல. அரசாங்கத்திலிருக்கும் போது அதன் வேலைத்திட்டங்கள் தொடர்பிலேயே பேசப்பட வேண்டும். முதன் முறையாக ஆட்சியமைத்துள்ளதால் இவர்களுக்கு அந்த அனுபவம் இல்லையென நினைக்கின்றேன்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்திப்பதற்காகச் சென்ற ஐ.தே.க. சிரேஷ’ட தலைவர்கள் மூவரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அதற்கமைய இது தொடர்பில் எடுக்கப்படவுள்ள அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்கவால் இது குறித்து ஐ.தே.க. செயற்குழுவுக்கு அறிவிக்கப்படும்.
எவ்வாறிருப்பினும் நாம் ஒன்றிணைவதற்கான வாய்ப்புக்களே அதிகமுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையும் அதேவேளை, அரசாங்கத்துக்கு எதிரான சகல கட்சிகளுடனும் இணைந்து பலம் மிக்க அரசியல் பயணத்தைத் தொடர்வோம். பாராளுமன்றத்துக்கு வர வேண்டும் என்பதை விட, சகல எதிர்க்கட்சிகளும் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அக்கறை கொண்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் கீழ் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை. சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தின் கீழ் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைகளுடன் இணைந்து பயணிக்க முடியும் என்பதே எனது நிலைப்பாடாகும். நாம் இணைந்து பயணித்தால் மாத்திரமே அரசாங்கத்துக்கு சவால் விடுக்க முடியும் என்றார்.





