அமெரிக்காவில் பனிப்புயலின் போது தனியார் விமானம் கவிழ்ந்து தீப்பற்றியதில் 7 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் பனிப்புயலால் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வடகிழக்கு மாகாணமான மெய்னே(Maine) மாநிலத்தில் கடுமையான பனிப்புயலின் போது தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.

பேங்கர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் ஊழியர்கள் உட்பட மொத்தம் 8 பேர் இருந்தனர். ஓடுபாதையிலிருந்து பயணத்தை ஆரம்பித்து 45 வினாடிகளில், விமானம் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விழுந்து தீப்பற்றியது.

இந்தக் கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து நேரத்தில் அந்தப் பகுதியில் மிகக் கடுமையான பனிப்புயல் வீசிக் கொண்டிருந்தது, மேலும் மோசமான வானிலை விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

விபத்தினால் பேங்கர் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக  விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.