துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் கலாப் அல் ஹப்தூர், ஊழியர்களுக்கு திருமண பரிசாக ரூ.12.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த அல் ஹப்தூர் குழுமத்தின் தலைவர் கலாப் அல் ஹப்தூர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: திருமணம் செய்வதும், ஒரு குடும்பத்தை உருவாக்குவதும் வெறும் தனிப்பட்ட விஷயம் மட்டுமல்ல. அவை சமூக மற்றும் தேசிய பொறுப்புகள். ஏனெனில் குடும்பங்களின் மூலமே தேசங்கள் கட்டியெழுப்பப்படுகின்றன மற்றும் சமூகங்கள் நிலைத்திருக்கின்றன.
எங்கள் அரசு குடும்ப வாழ்க்கையை தொடங்கும் இளைஞர்களுக்கு ஆதரவளிக்கத் தவறுவதில்லை. ஆனால் ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் திருமணம் செய்து குடும்பத்தை உருவாக்குவதற்கு அனைவரிடமிருந்தும் நடைமுறை முயற்சிகள் தேவைப்படுகின்றன.
அந்த அடிப்படையில், இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ளும் அல் ஹப்தூர் குழுமத்தில் பணிபுரியும் ஒவ்வொரு எமிராட்டி (ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர்) இளைஞர் அல்லது பெண்ணுக்கும் 50,000 திர்ஹாம் (ரூ.12.5 லட்சம்) வழங்கப்படும் என நான் உறுதியளிக்கிறேன்.
குடும்பங்களே சமூகத்தின் அஸ்திவாரம். குழந்தைகள் தேசத்தின் எதிர்காலத்துக்கான முதலீடு. ஓர் வலுவான குடும்பம் ஒரு ஒத்திசைவான சமூகத்தையும் வலுவான தேசத்தையும் உருவாக்குகிறது. நிதியுதவி பெற்று திருமணம் செய்துகொண்ட பிறகு, ஒரு குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த நிதி உதவி இரட்டிப்பாக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கலாப் அல் ஹப்தூர் யார்? – கலாப் அகமது அல் ஹப்தூர், ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி தொழிலதிபர் மற்றும் அல் ஹப்தூர் குழுமத்தின் தலைவர் ஆவார். இவர் கமர்ஷியல் பேங்க் ஆஃப் துபாய் தலைவராகவும், அமீரகத்தின் பெடரல் நேஷனல் கவுன்சில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1970-ல் தொடங்கப்பட்ட அல் ஹப்தூர் குழுமம், விருந்தோம்பல், வாகனத்துறை, ரியல் எஸ்டேட், கல்வி, பதிப்பகம் என பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறது.





