திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “சட்டமன்றத் தேர்தல் குறித்து நிகழ்த்தப்படும் ஒவ்வொரு ஆய்வும், கருத்துக் கணிப்புகளும் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் நிறுவ மக்கள் உறுதியெடுத்துவிட்டதை காட்டுகின்றன. நேற்று ஒரு பத்திரிகை எழுதியிருந்த ஆய்வுக் கட்டுரையும், இன்னொரு பத்திரிகை வெளியிட்ட கருத்துக் கணிப்பும் அதனை மெய்பிக்கின்றன.
’பெண்களின் இதயங்களை வெல்லும் போட்டியில், திமுக முன்னணியில் உள்ளது’ என தலைப்பிட்டு ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. அதில், சிறுபான்மையினர் மத்தியில் அதிமுகவின் அங்கீகாரம் சரிந்துள்ளது என்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 70 முதல் 80 சதவீத சிறுபான்மையினர் வாக்குகளைப் பெற்று கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் என்றும் சமூகவியலாளர்கள் கருதுகின்றனர் என தெரிவித்திருக்கிறார்கள்.
இன்னொரு பத்திரிகையும் சி வோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியிருக்கிறது.
அதில் திமுக கூட்டணிக் கட்சிகள் இடம்பெற்றிருக்கும் இண்டியா கூட்டணி 45% ஆதரவோடு முன்னிலையில் இருக்கிறது என தெரிவித்திருக்கிறது. அதிமுக இடம்பெற்றிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 33 சதவிகித ஆதரவுதான் இருக்கிறது. வித்தியாசம் 12% என்பதால் தொட முடியாத உயரத்தில் திமுக கூட்டணியை மக்கள் உயர்த்திப்பிடிக்கின்றனர்.
முதலமைச்சரின் தலைமையில் 2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி தொடர்ச்சியாக எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெறும் கூட்டணியாக திமுக அணி இருக்கிறது. 2026 தேர்தலிலும் திமுக வெல்லும். அதனை கருத்துக் கணிப்புகளும் உறுதி செய்கின்றன.
தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக பெண்களின் நம்பிக்கையையும் பேராதரவையும் பெற்று அசைக்க முடியாத அரசாக விளங்குகிறது திராவிட மாடல் அரசு. திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் மூன்று கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்று 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அடையப் போகும் வரலாற்று வெற்றியில் பெண்களுக்கு முக்கிய பங்கு இருக்கும்.





