தமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் 40 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்.26-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 30-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில், டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனைக் கடைகளில் 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஊழியர்களை தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தொழிலாளர்களுக்கு நிரந்தர தகுதி வழங்குதல்) சட்ட அமலாக்க அலுவலர் பிறப்பித்த உத்தரவின்படி, ஒரே தன்மையுடைய பணி களை செய்து வரும் அனைத்து டாஸ்மாக் கடை ஊழியர்களையும் பணி வரன்முறைப்படுத்த வேண்டும்.
டாஸ்மாக் நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் அடிப்படைச் சம்பளம், பஞ்சப்படி, வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மலைப்பிரதேசப் படி வழங்குவதைப் போல டாஸ்மாக் ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். காலி மதுபாட்டிலை திரும்பப் பெறும் திட்டம் என்ற பெயரில் ஊழியர்களுக்கு வேலைப்பளு திணிப்பதை கைவிட்டு தனி முகமை மூலம் அமல்படுத்த வேண்டும். டாஸ்மாக் நிர்வாகத்தின் மருத்துவ திட்டத்துக்கு மாற்றாக இஎஸ்ஐ திட்டம் அமல்படுத்த வேண்டும்.
டாஸ்மாக் கடை ஊழியர்களின் ஓய்வு வயதை 58 லிருந்து 60 ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 40 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்.26-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





