அரச ஊழியர்கள் நாட்டுக்கு சேவை செய்கிறோம் என்ற உணர்வுடன் செயற்பட வேண்டும்!

சிறந்த அரச சேவை ஒன்றை உருவாக்குவதாக இருந்தால் அரச ஊழியர்கள் நாட்டுக்கு சேவை செய்கிறோம் என்ற உணர்வுடன் செயற்பட வேண்டும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவுக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட புதிய முகாமைத்துவ உதவி அதிகாரிகள் 23 பேருக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நீதி அமைச்சில் இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர்  அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

அரச  சேவைக்கு ஆட்கள் அதிகம் என குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. என்றாலும் அரச சேவையின் சில இடங்களில் அதிகளவில் அதிகாரிகள் இருந்தாலும் சில இடங்களில் போதுமாளவு அதிகாரிகள் இல்லை. அதனால் அரசாங்கம் ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு 74ஆயிரம் பேரை அரச சேவைக்கு  இணைத்துக்கொள்ள தீர்மானித்திருக்கிறது.

பத்து, 15 வருடங்களாக குவிக்கப்பட்ட பிரச்சினைகளே இன்று அரச துறைகளில் காணப்படுகின்றன. அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அரசாங்கம் அதிகரித்தது. இந்த வருடத்திலும் அடுத்த வருடத்திலும் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்போம். நாங்கள் அரசியல் வாதிகளாக அர்ப்பணிப்பு செய்வது நாட்டுக்காகவாகும்.

அரச ஊழியர்களும் நாட்டுக்காக சேவை செய்கிறோம் என்ற உணர்வுடன் செயற்பட வேண்டும். அதன்போது சிறந்த அரச சேவை ஒன்று உருவாகும்.

அத்துடன்  நாங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.யாராவது ஒருவர் சட்ட உதவியை பெற்றுக்கொள்ள சட்டத்தரணி ஒருவரிடம் ஏன் செல்கிறார்.? அந்த நபர் சட்ட உதவி பெற்றுக்கொள்வதற்கு வரும் காரணம் சிறிய விடயமாக இருக்கலாம். என்றாலும் அது அவருக்கு பெரிய விடயமாகும். அதனால் சட்ட உதவியை பெற வருபவர்களுக்கு அனுதாபத்துடன் செவிசாயுங்கள், செவிசாய்ப்பதன் மூலமும் அவரது பிரச்சினைக்கு நிவாரணம் கிடைக்கிறது.

அரச  சேவை என்பது வெறுமனே ஓய்வூதியம் பெறும் தொழில் அல்ல. தங்களின் தொழில் தொடர்பில் பொறுப்புடன் மக்கள் தொடர்பில் கருணையுடன் சேவை செய்ய வேண்டும். எமது அரசாங்கம் அந்த கெளரவத்தை வழங்குகிறது. பணம் இருப்பவருக்கு ஒரு மாதிரியும் பணம் இல்லாதவருக்கு வேறு மாதிரியும் செயற்படுவது நீதியானது அல்ல என்றார்.