இந்தியாவில் பாம்பு கடியினால் ஆண்டுக்கு 58,000 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் வீதி விபத்துகளை விடவும், சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் ஏற்படும் பாம்பு கடி மரணங்கள் ஒரு பெரும் சுகாதார நெருக்கடியாக உருவெடுத்துள்ளன.

அண்மையில் குளோபல் ஸ்நேக்பைட் டாஸ்க்ஃபோர்ஸ் (GST) வெளியிட்டுள்ள தரவுகள் இந்தியாவில் கிராமப்புறங்களில் நிலவும் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50,000 முதல் 58,000 பேர் பாம்பு கடியால் உயிரிழக்கின்றனர்.

உலகில் ஏற்படும் மொத்த பாம்பு கடி மரணங்களில் பாதிக்கும் மேலானவை இந்தியாவிலேயே நிகழ்கின்றன.

கடந்த 20 ஆண்டுகளில் (2000-2019) மட்டும் இந்தியாவில் சுமார் 12 இலட்சம் பேர் பாம்பு கடியால் உயிரிழந்திருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பாம்பு கடிக்கான விஷமுறிவு மருந்தை செலுத்துவதில் இந்தியாவில் உள்ள 99 சதவீதம் சுகாதாரப் பணியாளர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக குளோபல் ஸ்நேக்பைட் டாஸ்க்ஃபோர்ஸ்  அறிக்கை தெரிவிக்கிறது.

விஷமுறிவு மருந்தால் ஏற்படும் ஒவ்வாமையை (Side effects) கையாளத் தெரியாததால், மருந்து செலுத்தப் பலர் தயங்குகின்றனர்.

சீரற்ற வீதி வசதி மற்றும் நோயாளர் காவு வண்டி தட்டுப்பாட்டால்,உயிரை காப்பாற்றுவதற்கான ‘கோல்டன் ஹவர்’ எனப்படும் பொன்னான நேரத்தை நோயாளிகள் இழக்கின்றனர்.

இன்றும் கிராமப்புறங்களில் பலர் வைத்தியசாலைக்குச் செல்வதற்குப் பதில், மந்திரவாதிகளையும் நாட்டு வைத்தியர்களையும் தேடிச் செல்வது மரண எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

இந்த அபாயத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த 2024 ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் தமிழக அரசு பாம்பு கடியை “அறிவிக்கை செய்யப்பட வேண்டிய நோயாக” (Notifiable Disease) மாற்றியுள்ளது.

இனி அரசு மற்றும் தனியார் வைத்தியசாலைகள் பாம்பு கடி வழக்குகளைக் கட்டாயம் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் மருந்து தட்டுப்பாட்டை நீக்கி, உயிரிழப்புகளைக் குறைக்க முறையான தரவுகள் சேகரிக்கப்படும்.

2030-ஆம் ஆண்டிற்குள் பாம்பு கடி மரணங்களை பாதியாகக் குறைக்க இந்திய மத்திய அரசு தேசிய செயல் திட்டத்தை (NAPSE) அறிமுகப்படுத்தியுள்ளது.