2003 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ மாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் தற்போது அதிகரித்து வரும் பணியாளர் எண்ணிக்கை மற்றும் நிறுவனச் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு, இடவசதிகளை விரிவுபடுத்துவதற்காக அருகாமையில் புதிய கட்டிடமொன்றை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போதைய கட்டிடத் தொகுதியில் பிரதம செயலாளர் அலுவலகம், மாகாண சபை மண்டபம், ஐந்து பிரதி பிரதம செயலாளர் அலுவலகங்கள் மற்றும் அபிவிருத்தி, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் ஐந்து விடயதான அமைச்சுக்கள் இயங்கி வருகின்றன. இதற்கு மேலாக, ஒவ்வொரு விடயதான அமைச்சுக்களின் கீழ் செயல்படும் திணைக்களங்கள், நியதிச்சட்ட நிறுவனங்கள் மற்றும் மொத்தமாக 36 அலகுகள் இக்கட்டிடத் தொகுதியில் நிறுவப்பட்டுள்ளன.
இவ்வமைப்புகளில் தற்போது 950 இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் கடமையாற்றி வருகின்றனர். காலப்போக்கில் ஊழியர்களின் எண்ணிக்கையும் நிறுவனங்களின் செயற்பாடுகளும் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், கட்டிடத் தொகுதியில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் அலுவலக நடவடிக்கைகள் பல்வேறு சிரமங்களுக்குள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலைமையை கருத்தில் கொண்டு, சப்ரகமுவ மாகாண சபை நிதியைப் பயன்படுத்தி, ரூபா 196.8 மில்லியன் செலவீட்டில், மாகாண சபைக் கட்டிடத் தொகுதிக்கு அருகாமையில் மூன்று மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடமொன்றை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான யோசனையை பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்@ராட்சி அமைச்சர் அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்த நிலையில், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை (02) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (03) செவ்வாய்க்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த முடிவை ஊடகங்களுக்கு அறிவித்தார்.
இந்த புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டதும், மாகாண சபையின் நிர்வாக மற்றும் அபிவிருத்திப் பணிகள் மேலும் ஒழுங்குபடுத்தப்பட்டு, ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் சிறந்த சேவைகள் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.





