அண்ணா நினைவு நாளான இன்று (பிப்.3), மதுரை திருநகரில் ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அண்ணா அறிவியல் பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா நாளிலேயே அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள், பூங்காவில் குவிந்து ஒவ்வொரு அறிவியல் உபகரணங்களையும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள அண்ணா பூங்கா வளாகத்தில் ஹாக்கி, கைப் பந்து, பூப் பந்து விளையாட்டு மைதானங்கள், பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள நடைபாதைகள் உள்ளன. இப்பூங்கா வளாகத்தில் அறிவியல், தொழில்நுட்பம், கணிதம், பொறியியல் தொடர்புடைய பொழுதுப்போக்கு விளையாட்டு சாதனங்கள் கற்றல் கருவிகளாக பயன்படுத்தி மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்த ஸ்டெம் (STEM) அண்ணா அறிவியல் பூங்கா ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வந்தது.
பள்ளி குழந்தைகள் நேரடியாக பார்க்க முடியாத பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் போன்ற அறிவியல் மாதிரிகள், ரோபோட்டிக்ஸ், கோளரங்கத்துடன், இந்த பூங்காவில் தத்ரூபமாக வடிவமைத்து பள்ளி குழந்தைகள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பவுதீகம், ரசாயனம், உயிரியல், கணிதம் தொடர்புடைய கோட்பாடுகள், விதிகளை விளக்கும் வகையில் மொத்தம் 100 அறிவியல் விளையாட்டு உபகரணங்களும் உள்ளன. பள்ளி மாணவர்கள், பொழுதுப்போக்கு விளையாட்டு உபகரணங்களுடன், அறிவியலை கற்றுக்கொள்ளவும், ஆர்வத்தை தூண்டவும் இந்த அண்ணா அறிவியல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
அண்ணா பெயரில் உள்ள இந்த பூங்காவை, அண்ணாவின் பிறந்த நாளில் திறக்க மாநகராட்சி முடிவு செய்து இருந்தது. இருப்பினும் கட்டுமானப் பணிகள் நிறைவடையாததால் இதன் திறப்பு விழா தள்ளிப்போய் கொண்டிருந்தது. இந்நிலையில், அண்ணாவின் நினைவு நாளான இன்று அண்ணா அறிவியல் பூங்கா மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவுக்கு மாநகராட்சி ஆணையாளர் சித்ரா தலைமை வகித்தார். இவ்விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் பி.மூர்த்தி, பூங்காவை திறந்த வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி கூறுகையில், ”இந்த அறிவியல் பூங்கா திட்டம் மாணவர்களுக்கான கற்றல் மையமாகவும், பொதுமக்களுக்கான பொழுதுபோக்குத் தலமாக திகழும். திருப்பரங்குன்றம், மதுரையின் முக்கிய ஆன்மிக சுற்றுலா ஸ்தலமாக திகழ்வதால், அங்கு வரக்கூடிய மக்கள், குழந்தைகளை இந்த அறிவியல் பூங்காவிற்கு அழைத்து வந்து பொழுதுப்போக்கலாம்” என்றார்.
இந்த பூங்காவில் இரவை பகலாக்கும் மின் விளக்குகள், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய சிசிடிவி கண்காணிப்பு காமிராக்கள், சுற்றிலும் பாதுகாப்பான சுற்றுச்சுவர் என்று இந்த பூங்கா இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்ததால், பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறுகையில், ”அண்ணா பூங்கா வளாகத்தில் தான், இந்த ஸ்டெம் அறிவியல் பூங்கா அமைக்கப் பட்டது. பூங்காவின் அண்ணா பெயரை மாற்றவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் சர்ச்சைகளை உண்டாக்கும் வகையில், பெயரை மாற்றியதாக குற்றம்சாட்டினர். ஆனால், மாநகராட்சிக்கும், அரசுக்கும் அண்ணா பெயரை மாற்றும் எண்ணமும், நோக்கமும் கிடையாது. அதனாலேயே, அண்ணா நினைவு நாளில் இந்த அண்ணா அறிவியல் பூங்காவை திறக்க வைத்து ஆணையாளர் சித்ரா சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்” என்றனர்.





