சமுதிகா ஜெயரத்னவை தலைமை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அனுமதி

தேசிய கணக்காய்வாளர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமான சமுதிகா ஜெயரத்னவை தலைமை கணக்காய்வாளர் நாயகமாக  நியமிக்க அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அனுமதி வழங்கியுள்ளது.

அரசியலமைப்பு பேரவையின்  தலைவரான  சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் பாராளுமன்ற கட்டடத்  தொகுதியில்  செவ்வாய்க்கிழமை (03) அரசியலமைப்பு  பேரவை கூடிய நிலையில், ஜனாதிபதியால் அரசியலமைப்பு முன்மொழியப்பட்ட பரிந்துரை பரிசீலிக்கப்பட்டு, முரண்பாடற்ற வகையில் ஏகமனதாக இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இதற்கமைய நாட்டின் புதிய தலைமை கணக்காய்வாளர் நாயகமாக  எல்.எஸ். ஜெயரத்னவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதியளித்து,  தமது தீர்மானத்தை ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்துள்ளது.

தலைமை கணக்காய்வாளர் நாயகமாக பதவி வகித்த டபிள்யூ .பி.சி.விக்கிரமரத்ன கடந்த 2025 ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்ற நிலையில் புதிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான நியமனம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் அரசியலமைப்பு பேரவைக்குமிடையில் இழுபறி நிலைமை ஏற்பட்டது  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் 4 தடவைகள் முன்மொழியப்பட்ட புதிய கணக்காய்வாளர் பதவிக்கான பெயர்களை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது.

இவ்வாறான பின்னணியில் கடந்த மாதம் முதல் வாரமளவில் அரசியலமைப்பு பேரவையின் சிவில் பிரதிநிதிகள் மூவரின் பதவி காலம் நிறைவடைந்தது.  இந்த வெற்றிடத்துக்கு பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோரின் பொது இணக்கப்பாட்டுக்கு அமைய ஒஸ்ரின் பெர்னாண்டோ,  ரஞ்சித் ஆரியரத்ன, வசந்தா செனவிரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள்.

அரசியலமைப்பின் 154 உறுப்புரையின் 41 (அ),(1) பிரிவின் பிரகாரம் ஜனாதிபதி கடந்த மாதம் 21 ஆம் திகதி கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு கணக்காய்வாளர்  திணைக்களத்தின் பிரதி கணக்காய்வாளர் நாயகமான ஜெயரத்னவை நியமிக்குமாறு பரிந்துரைத்தார்.