இலங்கையின் சுதந்திர தினமான இன்றைய தினத்தை தமிழர் தேசத்தின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தாயக செயலணி அமைப்பினர் மற்றும் வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாபெரும் எதிர்ப்புப் பேரணிகள் இன்று புதன்கிழமை (03.01.2026) வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்கமைய, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் இன்று முற்பகல்-10 மணியளவில் ஆரம்பமாகும் மாபெரும் எதிர்ப்புப் பேரணி கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தைச் சென்றடைந்து நிறைவடையும். கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு செங்கலடிப் பிள்ளையார் ஆலயத்தில் மாபெரும் பேரணி ஆரம்பமாகி இடம்பெறும். குறித்த மாபெரும் பேரணிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளும், பல்வேறு பொது அமைப்புக்களும் தமது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளன.
இந்தப் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் கைதிகளின் உறவுகள், சிவில்- சமூக அமைப்புக்கள், வர்த்தகர்கள், தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் தவறாது கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு போராட்ட ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.





