“திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கும் ஸ்டாலின் மீது நம்பிக்கை போய்விட்டது. திருமாவளவன் கூட்டணியை விட்டு வெளியே செல்வேன் என்கிறார். காங்கிரஸ் விசில் அடிக்க தயாராக இருக்கிறது” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்பார். எங்கள் கூட்டணி உறுதியாக கொண்டிருக்கிறது. ஆனால், திமுகவின் கூட்டணி உதிரியாகி கொண்டிருக்கிறது.
திமுகவின் இளைஞரணி மாநாடு இன்று விருதுநகரில் நடக்கிறது. காமராசரை அசிங்கமாகப் பேசி தோற்கடித்துவிட்டு, இப்போது அங்கு சென்று எப்படி மாநாடு நடத்துவீர்கள்.
தமிழகத்தில் போதை, வன்முறை கலாச்சாரங்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்திலிருந்து சென்றவர்கள் பிரதமர் மோடியை தாக்க முற்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லும்போது, தமிழகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. திமுகவினர் ஆணவத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
பள்ளிகளில் மாணவர்கள் கத்தி வைத்திருக்கிறார்கள். சாதிய வேற்றுமை நிலவுகிறது. திருமாவளவன் உட்பட அனைவருக்கும் சமுக நீதி பற்றி பேசவதற்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை. முதல்வர் ஸ்டாலினின் அரசாங்க விழாவை, அக்கட்சியின் அமைச்சரே புறக்கணிக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் மீது திமுகவினருக்கே நம்பிக்கை போய்விட்டது. திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கும் ஸ்டாலின் மீது நம்பிக்கை போய்விட்டது. திருமாவளவன் கூட்டணியை விட்டு வெளியே செல்வேன் என்கிறார். காங்கிரஸுக்கும் நம்பிக்கை போய்விட்டது. அவர்கள் ‘விசில்’ அடிக்க தயாராக இருக்கிறார்கள்.
யாரெல்லாம் திமுகவை வேண்டாமென்று நினைக்கிறார்களோ அவர்கள் பாஜக, அதிமுக தலைமையை சென்று பார்க்கலாம். எங்கள் கூட்டணி முழுமையாக உறுதியாகிவிட்டது. பேச்சுவாத்தை அவ்வப்போது நடக்கும். மத்திய அமைச்சர் அமித் ஷா இப்போதைக்கு தமிழகம் வரவில்லை. திமுகவுக்கு ஆட்டம் காண்பிக்க அமித் ஷா நிச்சயம் வருவார்” என்றார்.
பின்னர், கூட்டணி கட்சிகளை லிங்க் செய்து கோர்வையாக பேசிய தமிழிசை, “திமுகவின் சூரிய ஒளி மக்களுக்கு எந்த விதத்திலும் பலன் தராமல் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், இங்கே மக்களுக்காக இரட்டை இலை போட்டு, குக்கரில் சாதம் செய்து, மாம்பழம் வைத்து, சைக்கிளில் சென்று மக்களுக்கு கொடுத்து, அவர்கள் முகம் தாமரை போல் மலர்வதை பார்ப்போம்.
ஆனால், நீங்கள் வெறும் பானையை வைத்துவிட்டு, கையசைத்துவிட்டு மக்களுக்கு எதுவுமே கொடுக்காமல் இருக்கப் போகிறீர்கள். அதனால்தான் பானைகளும், கைகளும் உங்களோடு இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா, இல்லையா என்று ஓடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்கள் அனைவரும் எங்களுக்கு வாக்களிக்க தயாராக இருக்கின்றனர்” என்றார் தமிழிசை.





