சுதந்திரத் தமிழீழம் வேண்டுமா? அல்லது வேறு ஏதாவது தீர்வு வேண்டுமா? என்பதைத் தமிழ்மக்கள் தீர்மானிக்கட்டும். அதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும். அந்த வகையில் அதனை நோக்கி நாம் அணிவகுத்துச் செல்ல வேண்டும் என வல்வெட்டித்துறை நகர பிதாவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
சிங்கள தேசத்தின் 78 ஆவது சுதந்திர தினத்தின் பின்புலத்தில் தமிழ்த்தேசத்தின் கரிநாளை முன்னிட்டுத் தமிழ்த்தேசியக் கட்சி, தமிழ்த்தேசியப் பேரவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? எனும் தலைப்பிலான பகிரங்க அரசியல் கருத்தரங்கு புதன்கிழமை (04.02.2026) மாலை யாழ் வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு தலைமை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்து 78 வருடங்களாகியும் தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கைகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தொடர்ந்தும் சமஷ்டித் தீர்வைக் கேட்டு மண்டியிட்ட நாங்கள் 1976 ஆம் ஆண்டு மே மாதம்-14 ஆம் திகதி வட்டுக்கோட்டையில் தமிழீழப் பிரகடனத்தை மேற்கொண்டு அதனைத் தொடர்ந்து, 1977 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பொது வாக்கெடுப்பாகச் சென்றது. தமிழ்மக்களுக்குக்கு என்ன தீர்வு வேண்டும்? என்பதை அரசியல் கட்சிகளோ, அரசியல் கட்சிகளின் தலைவர்களோ தீர்மானிக்க முடியாது. மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அதுதான் சுயநிர்ணய உரிமை. ஐக்கியநாடுகள் சாசனத்தின் அடிப்படையிலான சுயநிர்ணய உரிமையை நாங்கள் பாவிப்பது எவ்வாறு? இதுதொடர்பில் தமிழ்த்தேசியக் கட்சிகளிடையே ஒரு தெளிவு ஏற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.





