“குரூப் 2 தேர்வு எதற்காக ரத்து செய்யப்பட்டது என எனக்கு தெரியவில்லை” என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட உலகம்பட்டியில் புதிய நியாயவிலைக்கடை கட்டிடத்தை திறந்துவைத்த அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எதற்காக ரத்து செய்யப்பட்டது என எனக்கு தெரியவில்லை. அதற்கென தனியாக அமைப்பு உள்ளது. தேர்வாணையத்திற்கு தலைவர் உள்ளார். தன்னாட்சி நிறுவனமாக செயல்படுகிறது.
மாணிக்கம் தாகூரின் தனிப்பட்ட கருத்துக்கு பதில் சொல்வது நியாயமாகப் படவில்லை. நாங்கள் கட்டுப்பாடுள்ள இயக்கத்தில் உள்ளோம். கருத்து என்பது கட்சிக்கு உடன்பாடு உள்ளதாக இருக்கவேண்டும். மாணிக்கம் தாகூர் எம்பி தினமும் அறிக்கை விடுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
அந்த இயக்கத்தின் தலைவர்கள் சொன்னால் அதற்கு பதில் சொல்லலாம். தற்போது திமுக கூட்டணி பலமாக உள்ளது. இடதுசாரி இயக்கங்கள், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி என எல்லா கட்சியும் நம்முடன் உள்ளது. யார் கூட்டணிக்கு வந்தாலும் அவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் மறுக்கப் போவதில்லை. வந்தால் நிச்சயமாக முதலமைச்சர் முடிவு செய்து சேர்ப்பார்” என்றார்.





