அரசாங்கத்துக்கும் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளுக்குமிடையில் அண்மையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு இணக்கப்பாடு ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படாததில் பல முக்கிய காரணிகள் காணப்படுகின்றன. அதில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள விடயங்களை எந்தவொரு தரப்பினராலும் தொடர முடியாதபட்சத்தில் பிரிதொரு தரப்பால் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இவ்வாறான ஏற்பாடுகளால் எதிர்காலத்தில் தொழிலாளர்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்வதற்காக இந்த புரிந்துணர்வு இணக்கப்பாட்டை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிட வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார்.
கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்ரஸ் தலைமையகத்தில் செவ்வாய்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்துக்கும் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளுக்குமிடையில் அண்மையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு இணக்கப்பாடு ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை. எனினும் எமக்கு அதில் ஒரு பிரதி கிடைத்துள்ளது. அதனை ஆராய்ந்த போது அதில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதை இணங்கண்டுள்ளோம்.
இதுவரைக் காலமும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் முத்தரப்பு ஒப்பந்தமே கைச்சாத்திடப்பட்டு வந்தது. குறித்த ஒப்பந்தத்தில் கம்பனிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கம் என்பன கையெழுத்திடும். எனவே அதில் கூறப்படும் எந்தவொரு விடயமும் மறைக்கப்பட மாட்டாது.
அதில் வெளிப்படை தன்மை பேணப்பட்டது. ஆனால் இந்த அரசாங்கம் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு இணக்கப்பாடு அவ்வாறானதல்ல.
குறிப்பாக குறித்த புரிந்துணர்வு இணக்கப்பாட்டின் நான்காவது சரத்தின் 4.1 உப பிரிவில் , முத்தரப்பு கலந்தாலோசனை செயல்முறையின் ஊடாகத் தொழிலாளர் சட்டங்களைத் திருத்தும் நடவடிக்கைகளைத் தொழில் அமைச்சு முன்னெடுத்து வரும் நிலையில், பணிக்கொடை (புசயவரவைல) உரிமையைக் கணக்கிடும் நோக்கத்திற்காக, ஒரு சேவை ஆண்டில் குறைந்தபட்சம் 180 நாட்கள் வருகை தந்திருக்க வேண்டும் என்ற தேவையைக் கருத்திற்கொள்ள முதலாம் தரப்பினர் ஒப்புக்கொள்கிறார்.
இது 1983 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க பணிக்கொடை கொடுப்பனவுச் சட்டத்தின் (திருத்தப்பட்டவாறான) 20 ஆம் பிரிவில் உள்ள ‘ஆண்டு’ என்பதற்கான வரைவிலக்கணத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும்.’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையில் இது ஆபத்தான விடயமாகும். 180 நாட்கள் தோட்ட கம்பனிகள் வேலை வழங்குமான என்பது கேள்விக்குறியே. இவ்வாறான கெடுபிடிகளின் காரணமாக பெருந்தோட்டப் பகுதிகளில் பல ஆண்டுகள் தொழில் புரியும் தொழிலாளர்கள் பலர் இன்னும் நிரந்தரமாக்கப்படாமலுள்ளனர். அவர்கள் இன்றும் பதிவு செய்யப்படாத தற்காலிக தொழிலாளர்களாகவே உள்ளனர்.
எனவே இணக்கப்பாடுகள் ஊடாக அரசாங்கம் இவ்வாறான விடயங்களை அனுமதிப்பது தொழிலாளர்களுக்கு எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இவ்வாறான சிக்கல்களைத் தவிர்த்துக் கொள்வதற்காக இந்த புரிந்துணர்வு இணக்கப்பாட்டை உத்தியோகபூர்வமாக வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
இதேவேளை குறித்த புரிந்துணர்வு இணக்கப்பாட்டின் 8ஆவது சரத்தில், ‘இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள எதுவும் எந்தவொரு தரப்பினருக்கும் சட்டபூர்வமாக கட்டுப்படத்தக்க கடப்பாடுகளை உருவாக்காது என்பதும், இதில் உள்ள எந்தவொரு நிபந்தனையையும் நிறைவேற்றுவதற்கு தரப்பினர் சட்டபூர்வமாக வற்புறுத்தப்பட மாட்டார்கள் என்பதும் தரப்பினரால் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்பட்டு உடன்படப்படுகிறது.’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது இதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை எந்த தரப்பு நடைமுறைப்படுத்தத் தவறினாலும் பிரிதொரு தரப்பால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட இந்த சம்பளம் வழங்கப்படும் என்று உறுதியளிக்க முடியாது.
எனவே தான் இதனை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடுமாறு வலியுறுத்துகின்றோம். ஆகக் குறைந்த 1550 ரூபா அடிப்படை சம்பளம் என்பதையாவது குறிப்பிட்டு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும். அவ்வாறில்லை எனில் 3 ஆண்டுகளின் பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த பேச்சுவார்த்தையை மீண்டும் எங்கிருந்து ஆரம்பிப்பது என்பது தெரியாது. இறுதியில் தொழிலாளர்களே அநாதரவாகக் கைவிடப்படுவர். எனவே இது தொடர்பில் நேரடியாக அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.





