15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் 14 பேரை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்துள்ள உயர் நீதிமன்றம், தற்போது உயிருடன் உள்ள 9 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
திருவான்மியூர் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த ரவி என்பவரைக் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய சின்னையா என்ற ஏழுமலையை ஒரு கும்பல் கடந்த 2010 ஜூன் 14 அன்று அவரது வீட்டின் முன்பாக வெட்டி படுகொலை செய்தது.
இந்த கொலை தொடர்பாக திருவான்மியூர், துரைப்பாக்கம் மற்றும் பல்லவன் சாலை பகுதியைச் சேர்ந்த சரவணன், கந்தகுமார், ஸ்டீபன்ராஜ், சந்துரு, குரு, அப்பு என்ற அப்புனு, கிருஷ்ணகுமார், புஷ்பராஜ், குருமூர்த்தி, னிவாசன் என்ற ஹரிஹரன், நாகராஜன், தாமு என்ற தாமோதரன், லட்சுமி, செல்வி உள்ளிட்ட 16 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை 7-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின்போது 2 பேர் இறந்ததால் அவர்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டது. இந்நிலையில் கொலைக்குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி எஞ்சிய 14 பேரையும் விடுதலை செய்து கடந்த 2017-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
மேல்முறையீடு இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன் ஆஜராகி, இந்த வழக்கில் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் 18 சாட்சியங்கள், 41 சான்று ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டும், கீழமை நீதிமன்றம் அவற்றை கருத்தில் கொள்ளவில்லை.
கொலையைக் கண்ணால் பார்த்த ஏழுமலையின் மனைவி மற்றும் குழந்தைகளின் சாட்சியங்களையும் கீழமை நீதிமன்றம் கவனிக்க தவறியுள்ளது. பழிக்குப்பழியாக நடந்த இந்த கொலை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்திருப்பது தவறானது என வாதிட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், நடந்த கொலைக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அரசு தரப்பு சாட்சிகள் இறந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் எனவும் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் கொலையை நேரில் பார்த்த ஏழுமலையின் மனைவி மற்றும் குழந்தைகளின் வாக்குமூலங்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை.
சில முரண்பாடுகள் இருப்பதைக் காரணம் காட்டி திட்டமிட்டு நடத் தப்பட்ட ஒரு கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை ஒட்டு மொத்தமாக விடுதலை செய்திருப்பதை அனுமதிக்க முடியாது. இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்ட கந்தகுமார், குரு, கிருஷ்ணகுமார், புஷ்பராஜ், தாமு ஆகியோர் இறந்து விட்டதால் அவர்கள் மீதான வழக்கு கைவிடப்படுகிறது. எஞ்சிய 9 பேரையும் குற்றவாளிகளாக தீர்மானிக்கிறோம்.





