அண்ணா நகர் பகுதியில் மிஸ்டர் ஹேர் என்ற பெயரில் சிகை சீரமைப்பு சிகிச்சை மையம் இயங்கி வந்தது. அங்கு, போலி மருத்துவர்கள் மூலம் முடி மாற்று சிகிச்சைகள் மேற்கொள்வது கண்டறியப்பட்டதால், 3 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த சிகிச்சை மையத்துக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
படித்த இளைஞர்களும், பெண்களுமே இத்தகைய மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படுவதால், தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) வழிகாட்டுதல்களை மேற்கோள் காட்டி மாநில மருத்துவ கவுன்சில் பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: முடி மாற்று சிகிச்சைகள் மற்றும் சரும பொலிவுக்கான ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை கடந்த 2022-ல் தேசிய மருத்துவ ஆணையத்தின் நெறிசார் குழு தெளிவாக வெளியிட்டுள்ளது.
மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் சார்பிலும், இத்தகைய சிகிச்சைகளுக்கு குறைந்தபட்ச தரநிலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அதனை பின்பற்றி தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலும் சில அறிவுறுத்தல்களை வெளியிடுகிறது. அதன்படி, முடி மாற்று சிகிச்சை மற்றும் லேசர் நுட்பத்திலான தோல் சிகிச்சைகளை மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த அங்கீரிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவ நிறுவனங்கள் பதிவு சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற மையங்களில் மட்டுமே அத்தகைய சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும். உரிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுவது கட்டாயம் ஆகும்.
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ தகுதிகள் இல்லாமல் விதிகளுக்கு புறம்பாக சிகிச்சைகள் வழங்குவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் மற்றும் நிறுவனம் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





