வெடிமருந்துகளுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது!

வத்தளை பகுதியில், வெடிமருந்துகளுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 13ஆம் திகதி, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே, வெடிமருந்துகள் அடங்கிய பொதியொன்று கண்டுப்பிடிக்கப்பட்டது.

அதில், 04 ரி – 56 ரக வெடிமருந்துகள், 04 ரிவால்வர் ரக வெடிமருந்துகள், 02 பிஸ்டல் ரக வெடிமருந்துகள் மற்றும் 11 வகையான சிம் அட்டைகள் என்பன காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவற்றை மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை தெல்வல – உதாதலகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பொல்பாகொடை – யக்கலமுல்ல பகுதியை சேர்ந்த 35 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த சந்தேகநபருக்கு கல்னேவ, கல்தோட்டை மற்றும் எல்பிட்டிய நீதிமன்றங்களால் பிடியாணை மற்றும் திறந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்றத்திலிருந்து 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவு பெறப்படவுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது.