முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முல்லைக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமையவுள்ள கப்பல் கட்டும் தளம், ஆயிரக்கணக்கான உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும்.
பல தலைமுறைகளாகப் பாரம்பரியமாக நடைபெற்று வரும் உப்பு உற்பத்தித் தொழில், இத்திட்டத்தால் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாரம்பரியத் தொழில்களையும், தொழிலாளர் உரிமைகளையும் காப்பது அரசின் கடமையாகும்.
எனவே, இத்திட்டத்தை ரத்து செய்வதோடு, அப்பகுதி மக்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடம் கருத்துகளைக் கேட்டறியும் ஜனநாயக முறையை அரசு பின்பற்ற வேண்டும். ஏற்கெனவே, விலை வீழ்ச்சியால் தவிக்கும் பல லட்சம் உப்பு உற்பத்தி குடும்பங்களின் நலன் கருதி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.




