சட்டத்தரணி, அவரது மனைவி படுகொலைச் சம்பவம் : மட்டக்களப்பில் சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டம்

கொழும்பில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும் படுகொலை செய்த கொலையாளிகளை கைது செய்து சட்டத்தினை நிலைநாட்டுமாறு கோரியும் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் திங்கட்கிழமை (16) நீதிமன்ற கடமைகளிலிருந்து விலகி இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

சட்டத்தரணிகள் உட்பட பொதுமக்களுக்கும் பாதுகாப்பற்ற நிலைமை உருவாகும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளதன் காரணமாக துப்பாக்கிதாரிகள் கைதுசெய்யப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டட தொகுதிக்கு முன்பாக ஒன்றுகூடிய சட்டத்தரணிகள் அமைதிமுறையில் போராட்டத்தினை நடத்தினார்கள்.

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் தியாகேஸ்வரன் தலைமையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சட்ட ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுடன் சட்டத்தரணிகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படவேண்டும் என இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது.