பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற நிலையில், இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். ஜனாதிபதியை எவரும் சிங்கள ஜனாதிபதி என்று குறிப்பிடவில்லை. வடக்கு, கிழக்கு உட்பட மலையக தமிழ் மக்கள் ‘எமது ஜனாதிபதி’ என்றே ஜனாதிபதியை அன்புடன் அழைக்கிறார்கள். இந்த முன்னேற்றம் மற்றும் மாற்றம் எதிர்க்கட்சிகளின் கண்களுக்கு தெரிவதில்லை. இனவாத முரண்பாடுகளால் சிதைவடைந்த மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கு சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளோம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகள் பதவி வகித்ததன் பின்னர் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவது தவறானது என்று நாட்டு மக்கள் குறிப்பிடுகிறார்கள்.
மக்களின் அபிலாசைகளுக்கு அமைவாகவே ‘பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் ‘ கொண்டு வந்துள்ளோம். கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு செயற்பாட்டார்கள். அவர்கள் அரச நிதியை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேர் விடயதானத்துக்கு உட்பட்ட வகையில் சபையில் உரையாற்றுகிறார்கள். ஒருசிலர் மிகவும் கீழ்த்தரமான வகையில் உரையாற்றுகிறார்கள். ஊடகங்களில் செய்தி வெளியாக வேண்டும் என்பதற்காக எதையும் பேசலாம் என்ற நிலையில் இருந்துக்கொண்டு செயற்படுகிறார்கள்.
பாராளுமன்றத்துக்கு வெளியில் பொய்யுரைத்தால் சிறைச் செல்ல நேரிடும் என்பதற்காக பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொண்டு பாராளுமன்றத்தில் இருந்துக் கொண்டு பொய்யுரைக்கிறார்கள்.
அரசியல் மாற்றத்துக்காக இந்த ஒருவருட காலத்தில் பல சட்டங்களை இயற்றியுள்ளோம். அதற்கமைவாகவே பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்துச் செய்யும் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஜனாதிபதிகளின் உரித்துக்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் செயற்பாடுகளை சர்வதேச நிறுவனங்களும், தேசிய நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில்,எதிர்க்கட்சியினர் மாத்திரமே குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்காவது போராட்டம் தோற்றம் பெற்றால் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சியினர் அங்கு சென்று அமர்ந்துக் கொள்கிறார்கள்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாத்திரம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுக்கு மாத்திரம் 3 கோடியே 44 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இந்த ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கு நிதி ஒதுக்குவது நியாயமற்றது.
பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற நிலையில், இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். ஜனாதிபதியை எவரும் சிங்கள ஜனாதிபதி என்று குறிப்பிடவில்லை.
வடக்கு ,கிழக்கு உட்பட மலையக மக்கள் ‘எமது ஜனாதிபதி’ என்றே ஜனாதிபதியை அன்புடன் அழைக்கிறார்கள்.இந்த முன்னேற்றம் மற்றும் மாற்றம் எதிர்க்கட்சிகளின் கண்களுக்கு தெரிவதில்லை.
இனவாத முரண்பாடுகளால் சிதைவடைந்த மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கு சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளோம். விமர்சனங்களை முன்வைப்பவர்கள் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டிருக்கட்டும்.
மக்கள் மத்தியில் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படாது. ஆனால் மக்களின் நிதியை மோசடி செய்த ஊழல்வாதிகள் முன்னிலையில் நாங்கள் தன்னிச்சையாக செயற்படுவோம் என்றார்.



