தமிழக அரசு சார்பில் தாம்பரத்தில் புற்றுநோயாளிகளுக்கு அரசு நல்லாதரவு மையம் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்படுகிறது.
ஆண்களைவிட பெண்களே புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, மார்பகப் புற்றுநோய் பாதிப்பு என்பது ஒரு லட்சத்தில் 16.7 பெண்களுக்கு ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், ஆண்களில் ஒரு லட்சத்தில் 13.6 பேர் வாய்ப்புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதில் சிக்கல்கள் நிலவி வருகின்றன.
புற்றுநோய் பாதிப்பு தீவிரமடைந்த பிறகே பெரும்பாலானோர் சிகிச்சைக்கு செல்கின்றனர். நோயை குணப்படுத்த முடியாத நிலையில், வலி நிவாரண சிகிச்சைகள் மட்டும் வழங்கப்பட்டு வருகின்றன.
உறவினர்களால் கைவிடப்பட்டவர்களுக்கு ஆதரவு கிடைக்காத நிலை இருப்பதால், தன்னார்வ அமைப்புகள், தனியார் மருத்துவ மையங்கள் சில இடங்களில் மருத்துவ நல்லாதரவு மையங்களை தொடங்கியுள்ளன.
குடிநீர், மின்சார வசதி: தமிழக அரசு சார்பில் அதுபோன்ற மையங்கள் இல்லாததால், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை – சென்னை மருத்துவ கல்லூரி சார்பில் மையத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டன. அதற்கான அனுமதி அரசிடம் கோரப்பட்டது.
அதனை பரிசீலித்த அரசு, தாம்பரத்தில் கரோனா காலத்தில் கட்டப்பட்ட தரை மற்றும் 2 தளங்கள் கொண்ட கட்டிடத்தை இதற்கு பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. அந்த இடத்தில் மின் வசதி, குடிநீர் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்காக ரூ.7.44 கோடியை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மேற்கொள்ள சென்னை மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் அமையவுள்ள உள்ள புற்றுநோய் மருத்துவ நல்லாதரவு மையத்தில் 180 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. புற்றுநோயாளிகளுக்கு தேவையான வலி நிவாரண சிகிச்சை, மன நல ஆதரவு சிகிச்சை, உளவியல் ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கான மருத்துவர்கள், செவிலியர்கள் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து பணியமர்த்தப்படவுள்ளனர். தூய்மைப் பணி மற்றும் பாதுகாப்புப் பணிக்கு 45 பேரை தனியார் மூலம் ஈடுபடுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.





