கோயில் திருவிழாக்களுக்கான அழைப்பிதழ்களில் உபயதாரர்களின் பெயரில் சாதி பெயர் இடம்பெறக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்போரூர், கந்தசுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவ விழாவுக்கான அழைப்பிதழில் சாதிப் பெயர்களை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி திருப்போரூரை சேர்ந்த சமரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, விழா அழைப்பிதழில் உபயதாரர்களின் பெயர்கள் சாதிப் பெயருடன் இடம் பெற்றுள்ளதைக் குறிப்பிட்டு, அறநிலையத்துறை நடத்தும் விழாவில், சாதி பெருமையை ஊக்குவிப்பதை அனுமதிக்க முடியாது.
அடுத்த விழாக்களின்போது அச்சிடப்படும் அழைப்பிதழ்களில் உபயதாரர்களின் பெயர்கள் மட்டுமே இடம் பெற வேண்டும். சாதி பெயர்கள் இடம்பெறக் கூடாது என உத்தரவிட்டு,வழக்கை முடித்து வைத்துள்ளார்.
மேலும், அந்த உத்தரவில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என சொல்லும் நிலையில், பிறப்பால் மட்டுமே சாதி வருகிறது. பிறப்பு மட்டுமே மக்களை பிளவுபடுத்துகிறது. நாட்டில் சாதியை ஒழிக்க ஒவ்வொரு அதிகாரிகளும் முயற்சிக்க வேண்டுமே தவிர, அதை பெரிதுபடுத்தக் கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.




