லிட்ரோ சிலிண்டர்கள் அதிகளவில் சந்தைக்கு விநியோக்கப்படுகிறது!

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழமைக்கு மாறாக அதிகளவில் சந்தைக்கு விநியோக்கப்படுகிறது. எதிர்வரும் மாதம் 13 ஆம் திகதி முதல் வெற்று சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுமென வர்த்தகத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டின் மொத்த எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் லிட்ரோ நிறுவனம் 80 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. லிட்ரோ நிறுவனம் எரிவாயு கொள்வனவு செய்வதில் எவ்வித சிக்கலும் தாமதமும் ஏற்படவில்லை.

எரிவாயு விநியோகத்தில் ஈடுபடும் தனியார் நிறுவனம் உரிய நேரத்தில் எரிவாயுவை கொள்வனவு செய்யாத காரணத்தால் அந்த நிறுவனத்தின் நுகர்வோர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். அவர்கள் தற்போது லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரை கொள்வனவு செய்வதால் லிட்ரோ விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சந்தையில் ஏற்பட்டுள்ள அதிக கேள்வியை கருத்திற் கொண்டு தற்போது நாளாந்தம் 1500 மெற்றிக்தொன் சிலிண்டர்களை விடுவிக்குமாறு லிட்ரோ நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. இன்று 3700 மெற்றிக் தொன் எரிவாயு தொகை, எதிர்வரும் 26 ஆம் திகதி 3900 மெற்றிக்தொன் எரிவாயு தொகை எதிர்வரும் 28 ஆம் திகதி 3800 மெற்றிக்தொன் எரிவாயு தொகை நாட்டை வந்தடையும் என்றார்.