அக்குரேகொட இரட்டைக்கொலை : 80 சதவீத விசாரணைகள் நிறைவு!

அக்குரேகொட பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியின் வாகனத் தரிப்பிடத்தில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் இது தொடர்பான விபரங்களை வெளியிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற இந்த இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பில், மூன்று நாட்களுக்குள் பிரதான துப்பாக்கிதாரி உட்பட ஐந்து சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸாரால் முடிந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் மூவர் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஏனைய சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக 12 பொலிஸ் குழுக்கள் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. எதிர்வரும் சில நாட்களில் இந்த விசாரணை நடவடிக்கைகளில் முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.