உலக பத்திரிகை புகைப்படக்கண்காட்சி கொழும்பில் ஆரம்பமானது

2025 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்படக்கண்காட்சியை கொழும்பு, ஒன்கோல் பேஸ் மோல் வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (27) வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன ஆரம்பித்து வைத்தார்.

இந்த புகைப்படக்கண்காட்சியை நெதர்லாந்து  தூதரகம், இலங்கை பத்திரிகை நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது.

கொழும்பு, ஒன்கோல் பேஸ் மோல் வளாகத்தில்  இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த கண்காட்சியை மார்ச் மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை பார்வையிடலாம். இதனை தொடர்ந்து மார்ச் மாதம் 13 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை முதல்  17ஆம் திகதி திங்கட்கிழமை வரை கண்டியில் சஹஸ் உயன மண்டபத்திலும் பார்வையிடலாம்.

141 நாடுகளிலிருந்து 3,778 புகைப்படக் கலைஞர்கள் சமர்ப்பித்த கிட்டத்தட்ட 60,000 புகைப்பட பதிவுகளை 31 புகைப்பட ஊடகவியலாளர்களை கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய நடுவர் குழுக்கள் கவனமாக மதிப்பாய்வு செய்துள்ளன.

அவற்றில்  2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த உலக பத்திரிகை புகைப்படங்களாக 42 புகைப்படக் கலைஞர்களின் புகைப்படைப்புகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 30 பேர் தங்கள் சொந்த நாடுகளின் கதைகளை புகைப்படம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன உரையாற்றுகையில்,

இன்றைய உலகம் தகவல் தொழில்நுட்பத்தால் அதிகமாக இணைந்திருந்தாலும், அதேநேரத்தில் பிளவுபட்டதாகவும் உணரப்படுகிறது. இத்தகைய சூழலில், ஒரு அமைதியான புகைப்படத்தின் வலிமை இன்னும் மிக முக்கியமானதாக உள்ளது. அந்தப் புகைப்படங்கள் நாடுகளுக்கிடையிலான இடைவெளியை கடந்து, அடக்குமுறை, துன்பம் மற்றும் அநீதி போன்ற உண்மைகளை நமக்கு வெளிப்படுத்துகின்றன.

உலக பத்திரிகை புகைப்படக்கண்காட்சி, நாம் எதற்கு எதிராகவும் எதற்காகவும் போராடுகிறோம் என்பதை நினைவூட்டுவதோடு, அன்பு மற்றும் ஒற்றுமையின் மனிதநேயத்தையும் பதிவு செய்கிறது. பல புகைப்படக் கலைஞர்கள் தங்கள் பாதுகாப்பை ஆபத்தில் இட்டு இந்த உண்மைகளை பதிவு செய்துள்ளனர்.

இலங்கை மற்றும் நெதர்லாந்து இடையிலான ஒத்துழைப்பு பல நூற்றாண்டுகளாக வளர்ந்து வந்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இலங்கையில் உள்ள நெதர்லாந்து தூதரகத்திற்கும், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்திற்கும் அவர்கள் செய்துவரும் அயராத பணிக்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த முறை புகைப்படங்கள் இலங்கையிலேயே அச்சிடப்பட்டுள்ளன என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். கருத்துச் சுதந்திரமே ஓர் உயிர்ப்பான சமூகத்தின் அடித்தளம் என நான் உறுதியாக நம்புகிறேன். அதனை ஆதரிக்கவும், பாதுகாக்கவும், சிவில் சமூகத்தின் முயற்சிகளில் இயன்றவரை இணைவதும் நமது கடமையாகும்.

இந்த அற்புதமான புகைப்படங்களை இணையத்தில் பார்த்தபோது இலங்கையிலிருந்து வெற்றி பெற்ற புகைப்படக் கலைஞர்களை காண முடியவில்லை. இது வருத்தமளித்தாலும், எதிர்காலத்தில் இலங்கையிலிருந்தும், உலகின் தெற்குப் பகுதிகளிலிருந்தும் அதிகமான வெற்றியாளர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உறுதியாக உள்ளது என்றார்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி குமார் லோபஸ் உரையாற்றுகையில்,

1955 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் ஆரம்பிக்கப்பட்ட உலக பத்திரிகை புகைப்பட அமைப்பானது கடந்த 71 ஆண்டுகளாக உலகின் சிறந்த புகைப்பட ஊடகவியல் மற்றும் ஆவணப் புகைப்படங்களைத் தெரிவு செய்து உலகம் முழுவதும் காட்சிப்படுத்தி வருகிறது.

2025ஆம் ஆண்டுக்கான போட்டியில், 141 நாடுகளைச் சேர்ந்த 3,700க்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்கள் சமர்ப்பித்த சுமார் 60,000 புகைப்படங்களில் இருந்து வெற்றிப் படைப்புகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

இவை இடம்பெயர்வு, காலநிலை மாற்றம், போர், போராட்டங்கள் போன்ற உலகளாவிய பிரச்சினைகளுடன், விலங்குகள், விளையாட்டு, குடும்பம் போன்ற நம்பிக்கையூட்டும் கருப்பொருள்களையும் வெளிப்படுத்துகின்றன.

இந்தக் கண்காட்சி, ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஊடகச் சுதந்திரத்தின் அவசியத்தை நினைவூட்டுகிறது. ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது பொதுமக்களின் தகவல் அணுகல் உரிமையை பாதிக்கும் என்பதை வலியுறுத்தினார்.

நெதர்லாந்து தூதுவர் வீபே டி போயர் உரையாற்றுகையில்,

2025 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்படக்கண்காட்சி உலகம் முழுவதும் பல நாடுகளில் காட்சிப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் நியூயோர்க் மற்றும் ஜேர்மனியின் ஓல்டன்பர்க் உள்ளிட்ட நகரங்களிலும் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

புகைப்பட ஊடகவியல் மற்றும் ஆவணப் புகைப்படங்களின் வலிமை, மனிதர்களின் புரிதலை ஆழப்படுத்தவும், உரையாடலை ஊக்குவிக்கவும், செயலில் ஈடுபட தூண்டவும் உதவுகிறது என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

ஒரு ஜனநாயக சமூகத்தில், சுதந்திரமான மற்றும் சுயாதீனமான ஊடகம் அத்தியாவசியமானது. நாம் வாழும் உலகை புரிந்துகொள்ளவும், அந்த உலகம் ஜனநாயகமாகத் தொடரவும் இது மிக முக்கியம். கருத்துச் சுதந்திரத்தையும் ஊடகச் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும் எங்கள் அர்ப்பணிப்பின் வெளிப்பாடாகவே இந்தக் கண்காட்சியை நடத்துகிறோம்.

சமூக அநீதிகள் மற்றும் துன்பங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்களை கொண்டுள்ள இந்தக் கண்காட்சியை கொண்டாடுவது சிலருக்கு முரண்பாடாகத் தோன்றலாம். ஆனால் பிரதான ஊடகங்களில் இடம் பெறாத பல முக்கியமான கதைகளை வெளிச்சம் போட்டும் புகைப்பட ஊடகவியலாளர்களின் பணியை அங்கீகரிப்பது அவசியமானதாகும்.

அனைவரும் சரியான தகவலைப் பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஆனால் சில நாடுகள் அல்லது குழுக்கள், மக்கள் சில புகைப்படங்களை பார்வையிடுவதை தடுக்க முயற்சிக்கின்றன; கடந்த ஆண்டு இங்கே ஒரு தூதரகங்கள் கூட கண்காட்சியைத் தடுத்தது.

ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது, பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையையும், அறிவார்ந்த முடிவெடுக்கும் திறனையும் கட்டுப்படுத்துவதாகும்.

இலங்கை ஓர் உயிர்ப்பான ஊடக கலாசாரத்தை கொண்ட நாடு. அண்மையில் நடைபெற்ற மூன்று சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் மூலம், இலங்கை மக்கள் ஜனநாயகத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்றார்.

இந்நிகழ்வில் நெதர்லாந்து தூதரக அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

மேலும் வாசிக்கicon

சமீபத்திய செய்திகள்