கொள்கை அடிப்படையிலான நிலைப்பாட்டில் எச்சந்தர்ப்பத்திலும் உறுதியாக நிற்கவேண்டும்!

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குமாறு கோருபவர்கள், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் சுரேஷ் சலே கைதுசெய்யப்பட்டமையை மாத்திரம் புறந்தள்ளமுடியாது. நாம் பயங்கரவாதத்தடைச்சட்டம் தேவையில்லை என்ற கொள்கை அடிப்படையிலான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும். அதாவது குறித்தவொரு நபர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவராகவோ அல்லது நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒரு பங்காளியாகவோ இருந்தாலும், நாம் அந்தக் கொள்கையின் பக்கம் உறுதியாக நிற்கவேண்டும். மாறாக எமக்குப் பொருந்தும்போது அதனைப் பயன்படுத்திவிட்டு, எமக்குப் பொருந்தாத வேளையில் மாத்திரம் ‘மீறல்’ எனக் குரலெழுப்பக்கூடாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களைத் திட்டமிட்டமை மற்றும் அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பிலான குற்றச்சாட்டின்கீழ் முன்னாள் உளவுத்துறைப் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே கைதுசெய்யப்பட்டிருப்பதுடன், அவரைப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் இடம்பெற்றிருக்கும் இந்தக் கைது குறித்து தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளப்பக்கத்தில் பதிவொன்றை அம்பிகா சற்குணநாதன், அதில் மேலும் கூறியிருப்பதாவது:

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குமாறு கோருபவர்கள், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் சுரேஷ் சலே கைதுசெய்யப்பட்டமையை மாத்திரம் புறந்தள்ளமுடியாது. சுரேஷ் சலேவை ஏனைய சட்டங்களின்கீழ் கைதுசெய்து, விசாரணை மேற்கொள்ளவேண்டியிருப்பின் 15 நாட்கள் தடுத்துவைப்பதற்கான உத்தரவைப் பெற்றிருக்கமுடியும். அவசியமேற்படின் அந்த உத்தரவை 15 நாட்களின் பின்னர் மீண்டும் நீடித்திருக்கமுடியும்.

அதேவேளை அவருக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இருப்பின், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கவேண்டும். மாறாக உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் இடம்பெற்ற தினம் நெருங்குவதனாலும், அதற்குள் ஏதேனுமொரு பெறுபேறைக் காண்பிக்கவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருப்பதனாலும் போதிய ஆதாரங்களைத் திரட்டுவதற்கு முன்பதாகவே சுரேஷ் சலே கைதுசெய்யப்பட்டிருப்பின், அது இக்கைது அவசியமற்றது எனத் தர்க்கிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் இடமளிக்கப்படும் நீண்டகாலத் தடுத்துவைப்பானது, கடந்தகாலங்களில் இடம்பெற்ற விசாரணைகளில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பு எதனையும் செய்யவில்லை.

அவ்வாறிருக்கையில் சுரேஷ் சலேவின் கைதுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கக்கூடும் என அரசாங்கம் கருதியமையினால், பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் தொடர்ந்து பேணுவதை நியாயப்படுத்துவதற்கு இக்கைது பயன்படுத்தப்படுகிறதா?

நாம் கொள்கை அடிப்படையிலான நிலைப்பாடுகளை  (பயங்கரவாதத்தடைச்சட்டம் தேவையில்லை) எடுக்கவேண்டும். அதாவது குறித்தவொரு நபர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவராகவோ அல்லது நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒரு பங்காளியாகவோ இருந்தாலும், நாம் அந்தக் கொள்கையின் பக்கம் உறுதியாக நிற்கவேண்டும். மாறாக எமக்குப் பொருந்தும்போது அதனைப் பயன்படுத்திவிட்டு, எமக்குப் பொருந்தாத வேளையில் மாத்திரம் ‘மீறல்’ எனக் குரலெழுப்பக்கூடாது என அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.