மட்டு. கொண்டையங்கேணி தமிழர்களின் பூர்வீக கிராமத்தை முஸ்லிம் கிராமம் என பெயர் சூட்டி அபகரிக்க முயற்சி

தனித் தமிழ் மக்கள் வாழும்  வாழைச்சேனை கொண்டையங்கேணி கிராமம் இன்று கொண்டயன்கேணி முஸ்லிம் கிராமம் என்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழர்களுடைய  பூர்வீக கிராமங்களின் பெயர்களை தங்களுடைய கிராமங்கள் என தெரிவித்து எதிர்காலத்தில் இந்த கிராமத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் என அபகரிப்பதற்காக செயற்படுகின்றனர். இதனை வன்மையாக  கண்டிப்பதாக கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தனபாலசிங்கம் நிர்மலன் தெரிவித்தார்.

வாழைச்சேனை கிண்ணியடியில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (1) நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வில் வாழைச்சேனை பிரதேச  சபையின் வருமானத்தை அதிகரிப்பதற்காக வட்டார எல்லைகளின் எல்லை நிர்ணயத்தை அடையாளப்படுத்தும் பிரேரணை ஒன்று தவிசாளரால் கொண்டுவரப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த பிரதேசம் கடந்த காலத்தில்  எல்லை நிர்ணய பிரச்சினை. ஒரு தீர்க்கப்படாத இந்த பிரச்சினைக்கு ஒரு முழுமையான தீர்வு காணப்படாமல் இந்த எல்லை நிர்ணயங்களை தங்களுக்கு தாங்களே தீர்க்கமாக தீர்மானித்து ஒரு வருமானத்தை நோக்கமாகக் கொண்டு எமது சமூகத்தின் எல்லையை பின்னுக்குத் தள்ளுகின்ற செயற்பாட்டை செய்யக் கூடாது என வலியுறுத்தினேன். அவர்கள் அதனை ஏற்றுக்கொள்வதாக இல்லை.

கோறளைப்பற்று பிரதேசத்தில் 14 வட்டாரங்கள். இதில் 4 முஸ்லிம்  வட்டாரங்கள்,  10 வட்டாரங்களில் தமிழர்கள் வாழ்கின்றனர். இருந்தபோதும் 8 வட்டாரங்கள் முழுக்க முழுக்க தமிழர்கள் வாழ்கின்ற சூழல் இருக்கின்ற நிலையில் 2 வட்டாரங்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் எதேச்சையாக குடியேற்றப்பட்டு வாழந்து வருகின்ற வட்டாரங்களாகும்.

இதில் எங்களுக்கான ஒரு எல்லை நிர்ணயம் வகுக்கப்படாமல் பிரதேச சபையால்  அவர்களாகவே எல்லை நிர்ணயங்களை தயாரித்து அதில் வருமானங்களை அதிகரிக்க வேண்டும் என்பது எதிர்காலத்திலே தமிழ் கிராமங்கள் சுருங்கிப் போகக்கூடிய அளவிற்கு ஆதாரங்களாக அமைந்துவிடும்.

எனவே வாழைச்சேனை வட்டாரம்,  கறுவாக்கேணி வட்டாரம் என்பது இரண்டு தமிழ் கிராமங்கள். இந்த கிராமங்களிலே தான் இந்த பிரச்சினைகள் இருக்கின்றன. கறுவாக்கேணி வட்டாரம் என்பது வாழைச்சேனை இலங்கை மின்சார சபையின் வீதியை ஒட்டியதாக அமைந்திருக்கிறது.

ஆனால்,  அது அடையாளப்படுத்தப்பட்டபோது அதற்கு எதிராக குழப்பங்கள் எழுப்பப்பட்டபோது அவை அனைத்தும் இடை நடுவில் விடப்பட்டது. இந்த நிலையில் பிரதேச சபையின் நிர்வாகம் எதனூடாக கறுவாக்கேணி 10ஆம் வட்டாரத்தை பிரித்து, இது தான் கறுவாக்கேணி 10ஆம் வட்டாரம் என அறிவிக்கப்போகிறது என்பது சந்தேகத்துக்கு இடமாக உள்ளது.

கோறளைப்பற்று பிரதேச சபை என்பது தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பிரதேச சபையாக இருந்தாலும் மக்களுக்கான ஒரு சரியான தீர்வுகளையும் முடிவுகளையும் எடுக்க முடியாமல்  இருக்கும் ஒரு பிரதேச சபையாக இருக்கின்றது.

இந்த கறுவாக்கேணி 10ஆம் வட்டாரத்தில் கிராம சேவகர் பிரிவு தனித்தமிழ் மக்களை சேர்ந்த பிரிவு. ஆனால், இதே கறுவாக்கேணி கிராம சேவகர் பிரிவுடன் உள்ள கொண்டையன்கேணி என்கின்ற கிராமம் இன்று கொண்டயன்கேணி முஸ்லிம் கிராமம் என உருவாக்கப்பட்டு கொண்டயன்கேணி கிராம அபிவிருத்தி சங்கம், மற்றும்  பள்ளிவாசல், சனசமூக நிலையம் என அரசு சார்ந்த சங்கங்கள் அனைத்தும் கொண்டயங்கேணி முஸ்லிம் கிராமம் என உருவாக்கப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களாக கொண்டையன்கேணி கறுவாக்கேணி இணைந்து கறுவாக்கேணி கிராம சேவகர் பிரிவில் இயங்குகின்ற ஒரு கிராமம். இந்த கொண்டையங்கேணி என்று உருவாக்கப்பட்டுள்ள பெயர் மட்டும்தான் கொண்டையங்கேணி முஸ்லிம் என்று இருக்கின்றதே தவிர அவர்களுடைய அனைத்து நிர்வாக செயற்பாடுகள் ஓட்டுமாவடி பிரதேச செயலகத்திற்கு உள்ள செம்மண் ஓடை கிராம சேவகர் பிரிவுக்குள் நடைபெறுகின்றது.

ஓட்டுமாவடி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள செம்மண் ஓடை கிராம சேவகர் பிரிவில் நிர்வாக நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமானால் ஏன் கொண்டையங்கேணி முஸ்லிம் கிராமம் என இந்த கிராமத்துக்கு பெயர் சூட்டவேண்டும். இது மிகவும் ஆபத்தான விடயம்.

தமிழர்கள் வாழ்ந்துவரும் பூர்வீக கிராமங்களின் பெயர்களை தங்களுடைய கிராமங்கள் இன்றி தெரிவித்து, எதிர்காலத்தில் இந்த கிராமத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் என்ற ஆதாரத்தை காட்டுவதற்காக செயற்படுகின்றனர். இதனை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்

கல்குடா தேர்தல் தொகுதி என்பது முஸ்லிம்களுடனும் தமிழர்களுடனும் ஒரு தேர்தல் நோக்கத்துக்கான தொகுதி. ஆனால், ஓட்டமாவடியில் இருந்து உருவாக்கப்படுகின்ற இந்த சங்கங்கள், அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள், வெளிநாடுகளில் இருந்து உருவாக்கப்படுகின்ற சங்கங்கள் எல்லாமே தங்களுடைய விலாசத்தை, அடையாளத்தை கல்குடா என்று பதிவு செய்து வருகின்றனர். இது ஏன் தேவை?

இது இன்னொரு 20 வருடங்களுக்கு பின்னர் முஸ்லிம் சமூகத்தின் பிள்ளைகள் சொல்லும் இது முஸ்லிம்களின் பூர்வீக நிலம் என்பர். எனவே, கோறளைப்பற்று பிரதேசத்தில் எங்கள் சமூகம், மக்கள் சார்ந்து யாரும் பேசுவதில்லை.

அரசியல் ரீதியாக பிரதேச சபைகளில் இருக்கின்ற அவர்கள் அனைவரும் வாய்மூடிகளாக தங்களுடைய அற்ப சொற்ப பிரதேச சபை ஆசனத்தை பாதுகாப்பதற்காக பேசாமல் இருக்கின்றனர் அல்லது பேசத் தெரியாமல் மடந்தையாக இருக்கின்றனர்.

நாங்கள் அப்படி இருக்க முடியாது. எனவே கல்குடா தொகுதிக்குள் இருக்கும் மக்களே உன்னிப்பாக சிந்திக்க வேண்டும்.

அதேவேளை பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது வாழைச்சேனை வட்டாரம், கறுவாக்கேணி வட்டாரம் ஆகிய இரண்டு வட்டாரம் என்பது பரிசீலனை செய்யப்பட்டு எல்லை நிர்ணயம் ஒழுங்காக செய்யப்பட்டதன் பின்னர் தான் பிரதேச சபைக்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதேவேளை கல்குடா என்று அழைப்பது தொடர்பாக பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கவனத்துக்கு கொண்டுவந்து, இவ்வாறு இயங்குகின்ற அமைப்புக்களை தடைசெய்து, அவர்கள் அவர்களுடைய பிரதேசத்தில் அவர்களுடைய அமைப்புக்களை  நடாத்துவதில் எந்தவித பிரச்சினையும் இதற்கு இல்லை. தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரியுள்ளேன்.

அதேவேளை கல்குடா என இன்னொரு கிராம சேவகர் பிரிவை அடையாளப்படுத்தி அவர்களுடைய அடையாளம் என இனிவரும் காலங்களில் காட்டக்கூடாது. ஒரு இனத்தின்  மொழியும் அடையாளமும் முகவரியும் எங்கு களவாடப்படுகிறதோ, அங்கே இந்த இனத்துக்கு எதிராக வன்முறையும் பயங்கரவாதமும் தோற்றுவிக்கப்படுகிறது என்றார்.