திருகோணமலையில் ASP சித்திரக் கலைக்கூட மாணவர்களின் வெளிப்புற ஓவியப் பயிற்சி

திருகோணமலை நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைப் பகுதியை அண்மித்த இடத்தில் ASP சித்திரக் கலைக்கூடத்தில் கற்கும் மாணவர்கள்  திங்கட்கிழமை (02)  வெளிப்புற சித்திரப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இப்பயிற்சியில் 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதுடன், கலைக்கூடத்தின் ஆசிரியர் சுதர்சன் வழிநடத்தலில் நிலக்காட்சி (Landscape) ஓவியங்களை வரைந்து நடைமுறை அனுபவத்தை பெற்றனர்.

கோட்டைப் பகுதியைச் சூழவுள்ள இயற்கைக் காட்சிகள், கடற்கரை பின்னணி, வரலாற்று கட்டிட அமைப்புகள் ஆகியவற்றை கவனித்து அவற்றை ஓவிய வடிவில் பதிவு செய்யும் பயிற்சியே இன்றைய நிகழ்வின் நோக்கமாக இருந்தது.

மாணவர்கள் தங்களின் கலைத்திறனை மேம்படுத்துவதோடு, நேரடியாக இயற்கையைக் கவனித்து வரையும் திறனையும் வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.

ஆசிரியர் சுதர்சன், வெளிப்புற சூழலில் நடைபெறும் இத்தகைய பயிற்சிகள் மாணவர்களின் பார்வைத்திறன், நிறங்களின் உணர்வு, ஒளி-நிழல் புரிதல் ஆகியவற்றை மேம்படுத்த உதவுகின்றன என தெரிவித்தார்.

மேலும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை கலைப்படைப்புகளின் மூலம் பதிவு செய்வது மாணவர்களுக்கு சிறப்பான அனுபவமாக அமைகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் உற்சாகத்துடன் ஓவியங்களில் ஈடுபட்டதுடன், பென்சிலை மாத்திரம் பயன்படுத்தி தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர்.

ASP சித்திரக் கலைக்கூடம் மாணவர்களின் கலைத்திறன் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ச்சியாக இத்தகைய வெளிப்புற பயிற்சிகளை ஏற்பாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.