தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ் ஜாகர்யன் ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இன்று புதன்கிழமை (04) நடைபெற்றுள்ளது.
கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது சர்வதேச அரசியல் மாற்றங்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் பிரதானமாக ஈரான் தற்போது எதிர்நோக்கி வரும் நெருக்கடி நிலைமைகள் குறித்தும் எதிர்காலத்தில் அந்த நாடு எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய சர்வதேச அரசியல் தாக்கம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக ஈரானை மையப்படுத்தி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் அது உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் தொடர்பில் இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் உலக அரசியல் களத்தில் ஏற்படும் இவ்வாறான மாற்றங்கள் இலங்கைக்கு எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்தும் இந்த சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய ஆக்கபூர்வமான தீர்வுகள் குறித்தும் ரஷ்ய தூதுவருக்கும் விமல் வீரவன்சவுக்கும் இடையில் நீண்ட ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியில் இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை முன்கூட்டியே இனங்கண்டு அதற்கான சர்வதேச ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.



