எதிர்கால சந்ததியினருக்காக நமது நாட்டின் கலாசார மரபுகளைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்

வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸமஹாராம மற்றும் சிதுல்பவ்வ விகாரைகளில் நடைபெறும் பொசன் வழிபாடுகள் மற்றும் பெரஹெர நிகழ்வுகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் பங்கேற்புடன் வியாழக்கிழமை (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த வருடாந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்த அனைவரின் ஆதரவும் தேவை என்றும், எதிர்கால சந்ததியினருக்காக நமது நாட்டின் கலாசார மரபுகளைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸமஹாராம ரஜமஹா விஹாரை மற்றும் சிதுல்பவ்வ ரஜமஹா விஹாரையில் பொசன் நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு விகாராதிபதி தேரர்கள் தமது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

சிதுல்பவ்வ விகாரைக்குச் செல்லும் வீதியை ஆண்டுதோறும் புனர்நிர்மாணம் செய்ய வேண்டியிருப்பதால், அதற்கு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸமஹாராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வண.  தேவாலேகம தம்மசேன நாயக்க தேரர், சித்துல்பவ்வ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி  வண. லேல்வல சமித நாயக்க தேரர், ஹம்பந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி, தென் மாகாண ஆளுநர் பேராசிரியர் சுசிரிபால மானவடு, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, தென் மாகாண பிரதம செயலாளர் சந்திம சி. முஹந்திரம்கே, ஹம்பந்தோட்டை மாவட்ட செயலாளர் பிமல் இந்திரஜித் சில்வா மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் தலைவர்கள், தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.