போலிப் பிரசாரங்கள் குறித்து அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விளாசல்!

ஈரான் கப்பலுக்கு தாக்குதல் நடத்த இலங்கை சூழ்ச்சி செய்துள்ளதாகவும் அதனால் இலங்கைக்கு எரிபொருள் கிடைக்காது என்றும் போலி பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டை பற்ற வைத்தாவது தமக்கு ஆட்சி கிடைத்தால் பிரச்சினையில்லை என்று  ஒரு தரப்பினர் செயற்படுகின்றனர். சின்ன சின்ன ஹனுமான்கள் நாட்டில் எல்லா இடங்களிலும் உள்ளார்கள் . எங்கு தீ வைக்கலாம் என்று பார்க்கிறார்கள். இவர்களை கைது செய்ய முடியாதா? என்று மக்கள் கேட்கின்றனர். ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யப் போவதில்லை. கருத்து சுதந்திரம் உள்ளது.கருத்துக்களை  குறிப்பிடும் போது பொறுப்புடன்  செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம் என  நீதி மற்றும்  தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற  அவசரகால சட்டம் அமுலாக்கம்  நீட்டிப்பு  தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

எதிர்கட்சியையும் மக்களையும் அடக்குவதற்காக இந்த சட்டத்தை கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால் அவ்வாறு யாருக்கு எதிராக இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது? யாருக்கு இதனால் இடையூறு ஏற்பட்டுள்ளது என்பதனை அவர்கள் கூற வேண்டும். இந்த அரசாங்கத்தை நாட்டு மக்களை நேசிக்கின்றது.

இவ்வாறான அரசாங்கத்திற்கு மக்களை அடக்குவதற்கான தேவை கிடையாது. இந்த அவசரகால சட்டத்தில் குறிப்பிட்ட சில சேவைகளையே உள்ளடக்கப்படுகின்றன. மின்சாரம்,எரிபொருள் விநியோகம், எரிவாயு விநியோகம், வைத்தியசாலை மருத்துவ சேவைகள் பொது போக்குவரத்து சேவைகள்,விமான சேவைகள், ரயில் சேவைகள், சுற்றுலாத்துறை வசதிகள்,உணவு விநியோகம்,சகல அரச அலுவலகங்கள்,அதிகாரிகளின் கடமைகள், அம்பியூலன்ஸ், தீயணைப்பு பிரிவு, தூய்மையாக்கல், குப்பை அகற்றல்,தொலைதொடர்பு சேவைகள் மற்றும் விவசாய துறை பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களே உள்ளன. இதன்மூலம் எந்த வகையிலும் மக்கள் அடக்குமுறைக்கு உள்ளடக்கப்பட போவதில்லை. அவர்களுக்கான சேவைகளை உறுதிப்படுத்துவதற்கே அவசரகால  சட்டத்தின் செல்லுபடி காலம் நீட்டிக்கப்படுகிறது.

தித்வா புயலின் பின்னர் இந்த சட்டத்தின் மூலமே சகல பிரதேசங்களுக்கும் சேவைகளையும்,மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் எதிர்க்கட்சியினர் முன்னெடுக்கும் பொய்யான பிரசாரங்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த எதிர்க்கட்சி உண்மைகளை மறைத்து அரசாங்கத்தை விமர்சித்து பொய்களை கூறுகின்றது. இது புதுமையான விடயமல்ல. இவர்கள் கூறும் பொய்களை 24 மணிநேரமும் முன்னெடுக்க முடியாது.

நாங்கள் ஆட்சிக்கு வரும் போது இவர்களுக்கு சர்வதேச தொடர்புகள் இல்லை, பெட்டிக் கடையைக்கூட நடத்த முடியாத என்றெல்லாம் கூறினர். ஆனால் இப்போது அரசாங்கத்திற்கும் வெளிநாடுகளுக்கும் இடையில் உள்ள தொடர்புகளை பொறுக்க முடியாமல் போயுள்ளது.

ஈரான் – அமெரிக்கா போர் முழு உலகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எங்கு யுத்தம் நடந்தாலும் மக்களே பாதிக்கப்படுவர். இதனாலேயே சமாதானத்தை நாங்கள் விரும்புகின்றோம். நாங்கள் எப்போதும் எந்த நாட்க்கும் சார்பில்லாத நடுநிலையில் இருந்து மனிதாபிமான அடிப்படையில் செயற்படுவோம். அந்த வகையில் ஈரான் கப்பல் விடயத்திலும் செயற்படுகின்றோம்.

இந்த விடயத்தில் ஊடகங்களில் பொய்யான தகவல்கள் பரப்படுகின்றன. ஈரான் கப்பலுக்கு தாக்குதல் நடத்த இலங்கை சூழ்ச்சி செய்துள்ளதாகவும்,இதனால் இலங்கைக்கு எரிபொருள் கிடைக்காது என்றும் போலி பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

நாட்டுக்கு தீ வைத்தாவது தமக்கு ஆட்சி கிடைத்தால் பிரச்சினையில்லை என்று செயற்படுகின்றன. இதனால் சின்ன சின்ன ஹனுமான்கள் நாட்டில் எல்லா இடங்களிலும் இருக்கின்றனர்.  இங்கு தீ வைக்கவே முயற்சிக்கின்றனர். அரசாங்கத்தினால் இவர்களை கைது செய்ய முடியாதா? என்று மக்கள் கேட்கின்றனர். ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யப் போவதில்லை. கருத்து சுதந்திரம் உள்ளது. அந்த சுதந்திரம் அவ்வாறே உள்ளது. ஆனால் எந்த கருத்தை கூறும் போதும் பொறுப்புடன் கதைக்குமாறு கேட்கின்றோம்.

இவர்களால் இந்த முறையில் ஆட்சியை பெற்றுக்கொள்ள முடியாது. மக்கள் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பப் போவதில்லை. ஆனால் தற்போதைய எதிர்க்கட்சியை வீட்டுக்கு அனுப்பி புதிய எதிர்க்கட்சியை கொண்டுவரும் நிலைமை ஏற்படலாம் என்றார்.