பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ். முரளீஸ்வரனின் வழிகாட்டலில், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தவேந்திரராஜா, அமுதமாலன், மனோகரன், ஹிசாந்தராஜா ஆகியோர் இணைந்து மேற்கொண்ட உணவக பரிசோதனையில் பல்வேறு சுகாதார விதிமுறைகள் மீறப்பட்டமை கண்டறியப்பட்டது.
அந்த பரிசோதனையின் போது, பொது சுகாதாரத்திற்கு இடையூறாக கழிவுநீரை திறந்த வெளியில் வெளியேற்றியதுடன், வண்டுகள் நிறைந்த நிலையில் உணவு மூலப்பொருட்களை உணவு தயாரிப்பதற்காக களஞ்சியப்படுத்தி வைத்திருந்தது செங்கலடி பிரதான வீதியில் அமைந்துள்ள ஒரு உணவகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, பொதுச் சுகாதார பரிசோதகர் தவேந்திரராஜா ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிவான், உணவக உரிமையாளருக்கு 70,000 ரூபாய் அபராதம் விதித்ததுடன், தேவையான திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் வரை உணவகத்தை தற்காலிகமாக மூடவும் உத்தரவிட்டார். மேலும், கைப்பற்றப்பட்டிருந்த வண்டுகளுடன் காணப்பட்ட கோதுமை மா, வடைப்பருப்பு, மைசூர் பருப்பு, கடலை உள்ளிட்ட உணவுப் பொருட்களை அழிக்கவும் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.
இதன் போது மனிதர் பாவனைக்கு உகந்ததல்லாத பெருமளவிலான உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டன.





