ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று திங்கட்கிழமை (09) உயர் நீதிமன்றில் ஆரம்பமானது.
நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த நீதியரசர்கள் குழுவில் ஷிரான் குணரத்ன, அர்ஜுன ஒபேசேகர, அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் காரியாலயங்களுக்கு விநியோகிப்பதற்காக சதொச நிறுவனம் ஊடாக 14,000 கேரம்போர்ட்கள் மற்றும் 11,000 தாம்போர்ட்களை இறக்குமதி செய்தமை ஊடாக அரசாங்கத்திற்கு சுமார் 06 கோடி ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றில் தொடரப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதியரசர்கள் குழு, பிரதிவாதிகள் இருவரையும் குற்றவாளிகளாக இனங்கண்டது.
அதற்கமைய மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும், நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
மேல் நீதிமன்றின் இந்தத் தீர்ப்புக்கு எதிராகவே, தங்களை அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து விடுதலை செய்யுமாறு கோரி முன்னாள் அமைச்சர்கள் இருவரும் இந்த மேன்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.



