சென்னை தி மயிலாப்பூர் இந்து பெர்மனெண்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ரூ.100 கோடியை விசாரணை நீதிமன்றத்தில் வைப்புத்தொகையாக செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவுப்படி வைப்புத் தொகையை செலுத்தாத நிதி நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் யாதவ் ஜாமீன் மனுவை கடந்த பிப்ரவரி 5-ம் தேதி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, ஜாமீன் கோரி தேவநாதன் யாதவ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, சதீஷ் சந்திர சர்மா அமர்வு விசாரித்தது.
தேவநாதன் யாதவ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியின் வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் பிணை வழங்க மறுத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என்று குறிப்பிட்டு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், ரூ.100 கோடியை விசாரணை நீதிமன்றத்தில் வைப்புத்தொகையாக செலுத்தும் பட்சத்தில் மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவும் மனுதாரருக்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.



