ஒருங்கிணைந்த திட்டமொன்றின் ஊடாக மணல் மாபியாக்களை கட்டுப்படுத்தலாம்

ஒருங்கிணைந்த திட்டமொன்றின் ஊடாக மணல் மாபியாக்களை கட்டுப்படுத்தலாம் பணியகத்தின் செயற்பாடுகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கவுள்ளோம் என புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சமன் ஜெயசிங்க தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விலைகளைக் கட்டுப்படுத்தி ஒரே சீராகப் பேணுவதற்கும், மக்களின் தேவைக்கேற்ற விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்குமான புதிய பொறிமுறையொன்றை உருவாக்கும் நோக்கிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்  செவ்வாய்க்கிழமை (10) ஆளுநர் அலுவலகத்தில் நைபெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆளுநர் சுட்டிக்காட்டிய விடயங்களுடன் நான் முழுமையாக இணங்குகின்றேன். ஒருங்கிணைந்த திட்டமொன்றின் ஊடாகவே இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். மணல் மாபியாக்களால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன்.

அண்மையில்  கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரும் வழியில், கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் – பூநகரி வீதியில் கடல்நீரேரிக்கு அண்மையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடைபெறுவதைக் கண்ணுற்றோம். நாம் அங்கு நேரடியாகச் சென்றபோது அவர்கள் தப்பித்து ஓடிவிட்டார்கள்.

வடக்கு ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு மாவட்டக் குழுக்களின் ஊடாக அனுமதிகளை வழங்குவதன் மூலம் மணல், கிரவல் விநியோகம் மற்றும் விலைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

அத்துடன், எதிர்காலத்தில் எமது பணியகத்தின் செயற்பாடுகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கவுள்ளோம். 2027ஆம் ஆண்டிலிருந்து அனுமதிப்பத்திரங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்டு, அனைத்து நடைமுறைகளும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்படும் என்றார்.