ஈரானிய கால்பந்து வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியா அடைக்கலம்

ஆசியக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த ஈரானியப் பெண்கள் உதைபந்தாட்ட அணியின் ஐந்து வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அரசியல் புகலிடம் வழங்கியுள்ளது.அரசியல் கட்டுரைகள்

போட்டியின் ஆரம்பத்தில் ஈரானிய தேசிய கீதத்தைப் பாட மறுத்தமைக்காக, நாடு திரும்பினால் அவர்கள் கொல்லப்படலாம் அல்லது கடும் தண்டனைக்குள்ளாகலாம் என்ற அச்சத்திற்கு மத்தியிலேயே இந்த மனிதாபிமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டோனி பர்க் திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், ஸஹ்ரா கன்பரி (அணித்தலைவி), பாத்திமா பசந்திதே, ஸஹ்ரா சர்பாலி அலிஷா, மோனா ஹமூதி, அத்தீபே ரம்ஸானிசாதே ஆகிய ஐந்து வீராங்கனைகளுக்கு வீசா வழங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.

“நீங்கள் அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்; இது உங்கள் வீடு போன்றது” என அமைச்சர் அவர்களுக்குத் தைரியம் ஊட்டியுள்ளார்.

ஈரான் மீது போர் தொடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த வீராங்கனைகளின் பாதுகாப்பு தொடர்பில் அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

“ஐந்து பேர் ஏற்கனவே பாதுகாக்கப்பட்டனர், எஞ்சியோர் வழியில் உள்ளனர். அவர்களை ஈரானுக்குத் திருப்பி அனுப்புவது பாரிய மனிதாபிமானத் தவறாக அமையும். அங்கு அவர்கள் கொல்லப்பட அதிக வாய்ப்புள்ளது” என ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தென் கொரியாவுக்கு எதிரான போட்டியின் போது தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, ஈரானிய வீராங்கனைகள் மௌனமாக நின்றதை ஈரானிய அரச ஊடகம் “கௌரவமற்ற செயல்” என விமர்சித்திருந்தது. அத்துடன், அவர்கள் “யுத்த கால துரோகிகள்” என முத்திரை குத்தப்பட்டதால், நாடு திரும்பினால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என மனித உரிமை அமைப்புகள் எச்சரித்திருந்தன.

தற்போது ஏனைய வீராங்கனைகளும் அவுஸ்திரேலியப் பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ள போதிலும், ஈரானில் உள்ள தமது குடும்பத்தினரின் பாதுகாப்புக் கருதி சிலர் நாடு திரும்ப யோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.