ராமதாஸ் 10 வயது குழந்தை போல ஆகிவிட்டார். சில துரோகிகள், திமுக கைக்கூலிகள் அவரது மனதை கெடுத்து இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டனர் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
பாமக மகளிர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த பல்லாவரத்தில் நேற்று நடந்தது. கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி, பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும் மகளிர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கும், பாமக அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு கடுமையாக உழைக்கவும் உறுதியேற்போம். மாநிலங்களவை உறுப்பினராக 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள அன்புமணிக்கு வாழ்த்துகள் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு, மதுவின் மூலம் கிடைக்கும் வருமானம் ரூ.35 ஆயிரம் கோடியாக இருந்தது. அது ரூ.60 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. மதுவின் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு மாதம் ரூ.1,000, ரூ.5 ஆயிரம் என்று மக்களுக்கு திமுக லஞ்சம் கொடுத்து வருகிறது. இதுவெல்லாம் மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் கிடையாது. நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு நல்ல வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்கள் கைநிறைய சம்பாதிப்பது மட்டும்தான் மக்களுக்கான வளர்ச்சித் திட்டம்.
இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக தற்போது காஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காஸ் சிலிண்டர் விலையில் 100 ரூபாய் மானியம் கொடுப்போம் என்று திமுக சொல்லியது. அதை இப்போது செய்யலாமே. மக்களுக்குப் பயனாக இருக்கும். மாதம் தோறும் மின் கட்டணம் கணக்கீடு, நீட் தேர்வு ரத்து போன்ற பல்வேறு வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை.
தமிழகத்தில் சமூக நீதிக்காகவும், மது ஒழிப்பிற்காகவும், கல்விக்காகவும், நீர் மேலாண்மைக்காகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தி பல சாதனைகளை படைத்த கட்சி பாமக. ஆனால், நமக்கு உரிய அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்ற வருத்தம் உள்ளது.
கடந்த 6 மாதமாக எனக்கு என்ன நடக்கிறது என்று நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். அவற்றையெல்லாம் நாம் கடந்து வந்து கொண்டிருக்கிறோம். ராமதாஸ் 10 வயது குழந்தை போல ஆகிவிட்டார். அவரது சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு, அவரைச் சூழ்ந்து நிற்கும் சில துரோகிகள், திமுக கைக்கூலிகள் ராமதாஸ் மனதை கெடுத்து, இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.
ராமதாஸ் தான் நமக்கெல்லாம், குலதெய்வம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. நாம் சமூகத்துக்கு பாடுபட வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கிறது. அதை நோக்கிச் செயல்படுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.





