பாஜக தலைமையிலான தேஜ கூட்டணிக்கு தவெகவை இழுக்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் சூழலில், 60 பேருடன் தவெக தலைவர் விஜய் திடீரென கலந்துரையாடல் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பல மாதங்களாக காங்கிரஸ் தங்களது கூட்டணிக்கு வரும் என எதிர்பார்த்து காத்திருந்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் அப்செட் மனநிலையில் இருக்கும் விஜய்யை, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இப்படியான பரபரப்பான சூழலில்தான், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த நிர்வாகிகளுடன் விஜய் நேற்று நேரடியாகக் கலந்துரையாடினார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. முதற்கட்டமாக நேற்று 60 நிர்வாகிகள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். முதலில் தி.நகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்திடம் விஜய் நேர்காணல் நடத்தினார். அவரைத் தொடர்ந்து மற்றவர்களிடமும் வரிசையாகப் பேசினார்.
அப்போது விஜய், “மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். இந்தப் பாதையில் நமக்கு நிறைய தடைகள், சவால்கள் வரலாம். அதையெல்லாம் முன்கூட்டியே தெரிந்துதான் நான் களத்திற்கு வந்திருக்கிறேன். நிச்சயம் நாம் வெற்றி பெற்று, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நமது கொள்கையில் வெல்வோம்!” என உற்சாகப்படுத்தியதாக கூறப்படுகிறது.
நேர்காணல் முடிந்ததும் அவர்கள் ஒவ்வொருவருடனும் கை குலுக்கி வழியனுப்பி வைத்தார். வெளியே வந்தவர்களுக்கு, அவர்கள் போட்டியிட விரும்பிய தொகுதியின் பெயருடன் கூடிய பிரத்யேக ‘பை’ ஒன்று வழங்கப்பட்டது. அதில் தேர்தலில் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய விவரங்கள் அடங்கிய கையேடு இருந்ததாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அழைத்து விஜய் பேச இருக்கிறார்.
இந்த திடீர் நேர்காணல் குறித்து பேசுவோர், “திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் சென்ற பிறகு விஜய் வருத்தத்தில் இருப்பது உண்மைதான். அந்தச் சூழலைப் பயன்படுத்தி தேஜ கூட்டணிக்கு அழைப்புகள் வருகின்றன. ஆனால் அதை ஏற்றுக்கொள்ள விஜய் தயாராக இல்லை. இதற்கிடையில், கரூர் விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு வரும் மார்ச் 10-ம் தேதி டெல்லி அலுவலகத்தில் ஆஜராகுமாறு விஜய் தரப்புக்கு சம்மன் அளிக்கப்பட்டது. அங்கு சென்றால் தேவையற்ற அரசியல் விவாதங்கள் எழும் என விஜய் தரப்பு கருதுகிறது.
எனவேதான், இந்த வேட்பாளர் நேர்காணல் அவசரமாகத் திட்டமிடப்பட்டது. இந்த வாரம் முழுவதும் கட்சி நிகழ்ச்சிகள் தொடரும். பின்னர் மார்ச் 18-ம் தேதி அமாவாசை தினத்தன்று, 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டு, அதன் பிறகுதான் விஜய் டெல்லி செல்வார்” என்றனர்.
நிருபர்களிடம் பேசிய தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், “நாங்கள் பாஜக கூட்டணியில் இணையப் போவதாக வெளியாகும் தகவல்கள் வெறும் யூகங்களே. அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதேனும் இருந்தால் அது தலைமையால் முறைப்படி அறிவிக்கப்படும். தகுதியான வேட்பாளர்களைத் தனித்தனியாக அழைத்து தலைவர் நேர்காணல் நடத்தி வருகிறார். இது முடிந்ததும் முழுமையான பட்டியல் வெளியாகும்” என்றார்.





