வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் சார்ந்த நீரியல் வளங்களுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து ஆராயும் கூட்டம் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கே.டி.லால் காந்த தலைமையில் வியாழக்கிழமை (12) வவுனியாவில் நடைபெறவுள்ளது.
வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டமானது, தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து, இனப்பரம்பலை மாற்றும் நோக்கிலேயே முன்னெடுக்கப்படுவதாகவும், அதனால் தமிழ் மக்களுக்கு எவ்வித பயனுமில்லை எனவும் கூறி, தமிழ்மக்களும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் அத்திட்டத்துக்குக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதனையடுத்து கிவுல் ஓயா திட்டம் குறித்துத் தெளிவூட்டும் வகையில் கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழ்மக்கள் தமக்கு மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியாகவே மகாவலி அதிகாரசபையைக் கருதுவதாகவும், தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் மகாவலி அதிகாரசபையின் கிவுல் ஓயா திட்டத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கே.டி.லால் காந்த தலைமையில் வியாழக்கிழமை (12) வவுனியாவில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் சார்ந்த நீரியல் வளங்களுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து வியாழக்கிழமை (12) மு.ப 9.00 – பி.ப 5.00 மணி வரை வவுனியா கச்சேரியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் ஆராயப்படும் எனக் குறிப்பிட்டு அம்மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்புக்கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இதற்கு முன்னைய சந்தர்ப்பங்களில் ஒரு விடயதானம் குறித்து ஆராய்வதற்கென இவ்வாறு காலை முதல் மாலை வரை ஒருநாள் முழுவதும் கூட்டம் இடம்பெற்றதில்லை எனச் சுட்டிக்காட்டியதுடன் தாம் ஏற்கனவே விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக இக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய கிவுல் ஓயா திட்டம் குறித்து ஆராயப்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.
அதேவேளை இக்கூட்டத்துக்கு வடக்கின் ஏனைய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அறியமுடிகிறது.




