வடக்கு மாகாண ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் வடக்கு ஆளுநர் வேதநாயகன் விடுத்துள்ள உத்தரவு!

வடக்கு மாகாணத்தில் சேவையின் தேவை கருதி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்களை முழுமையாக நடைமுறைப்படுத்திய பின்னரே வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
வடக்கு மாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்  இன்று புதன்கிழமை (11.03.2026) மாலை யாழ். சுண்டுக்குளியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

வழங்கப்பட்ட எந்தவொரு இடமாற்றமும் மேன்முறையீடு காரணமாக நிறுத்தப்பட்டால் அந்த வெற்றிடத்துக்குப் பதிலாக உடனடியாக மாற்று இடமாற்றமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும். நடப்பாண்டுக்கான இடமாற்றங்களை மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும். இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களை விடுவிக்கத் தவறும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக உடனடியாக ஒழுங்கு நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.