இந்தியாவின் தலைநகர் டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 300 முதல் 400 வரையிலான குடிசை வீடுகள் தீக்கிரையாகி முற்றாக அழிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தமது வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை (11) இரவு 11:50 மணியளவில் மட்டியாலா கிராமத்தில் உள்ள மீன் சந்தையில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வியாபாரிகள் தமது அன்றாட பணிகளை முடித்துக்கொண்டிருந்த வேளையில் திடீரென பரவிய தீ, அருகில் இருந்த குடிசைப் பகுதிகளுக்கு அதிவேகமாகப் பரவியது.
டெல்லி தீயணைப்புத் திணைக்களத்தின் 23 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, நீண்ட நேரப் போராட்டத்தின் பின்னர் இன்று வியாழக்கிழமை (12) அதிகாலை தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தினால் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படாதபோதிலும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீதிக்கு வந்துள்ளனர்.
தீ ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.





